கோவை – கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் இருந்த காட்டுயானை ஒன்று அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர் நிலங்களை நாசம் செய்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி, ‘ மிஷன் மதுக்கரை மகாராஜா’ என்ற நடவடிக்கையின் மூலம், நான்கு கும்கி யானைகளின் உதவியோடு, மகாராஜா என்ற அந்த ஆண் யானை வலுக்கட்டாயமாகப் பிடித்து லாரியில் ஏற்றப்பட்டது.
பல மணி நேரப் பயணங்களுக்குப் பின்னர், டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு முகாமில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டது.
இந்நிலையில், யானை திடீரென உயிரிழந்ததாக நேற்று தகவல்கள் வெளிவந்தன.
அதனைத் தொடர்ந்து யானையின் இறப்பிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன.
அதிகளவு மயக்க மருந்து செலுத்தியதால் தான் யானை உயிரிழந்துவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், அந்த யானை கூண்டின் கம்பிகளில் தொடர்ந்து பலமாக முட்டியதால், தலையில் எலும்புகள் நொறுங்கி இறந்திருப்பதாக உடல்கூறுப் பரிசோதனைக்குப் பிறகு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.