கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக (Intervener) இணைத்துக் கொள்ள மஇகா செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
பழனிவேல் தரப்பினர் சார்பாக முன்னாள் பத்து மஇகா தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 பேர் கொண்ட அவரது குழுவினர் மஇகாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பழனிவேல் தரப்பினரின் ஆட்சேபங்களை நிராகரித்த நீதிமன்றம், மஇகா இந்த வழக்கில் நேரடியான நலன்களைக் கொண்டுள்ள ஒரு தரப்பு என்ற காரணத்தால், அவர்களையும் ஒரு தரப்பாக வழக்கில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்தது.
இந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹனிபா ஃபாரிகுல்லா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மஇகா சார்பிலான விண்ணப்பத்தை மஇகா தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல் சமர்ப்பித்திருந்தார்.
வழக்கு விண்ணப்பம் தொடர்பான செலவுத் தொகை வழக்கின் இறுதியில் நிர்ணயிக்கப்படும் என்றும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இன்று நீதிமன்றம் வந்திருந்த பழனிவேல் தரப்பு ஆதரவாளர்கள்…
சங்கப் பதிவகம் மஇகா தொடர்பில் மேற்கொண்ட சில முடிவுகளின் மீதான சீராய்வு மனுவுக்கு அனுமதி கோரி பழனிவேல் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த சீராய்வு மனுவுக்கு எதிராக உரிய ஆவணங்களைத் தயாரித்து சமர்ப்பிக்க மஇகாவுக்கு நீதிமன்றம் கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை 18 ஆகஸ்ட் 2016 நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய நீதிமன்ற முடிவு குறித்து பழனிவேல் தரப்பினர் மேல் முறையீடு எதுவும் செய்வார்களா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.