வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்து வரும் வேளையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், தனது துணையதிபர் வேட்பாளராக செனட்டர் டிம் கெய்ன் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வெர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த டிம் கெய்ன் ‘ஹிஸ்பெனிக்ஸ்” (Hispanics) என அழைக்கப்படும் அமெரிக்க சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதால், அந்த சமூகத்தின் ஆதரவு வாக்குகளைத் திரட்டுவதில் அவர் முக்கியப் பணியாற்ற முடியும் எனக் கருதப்படுகின்றது.
ஸ்பெயின் நாட்டை பூர்வீகமாகவும், ஸ்பெயின் மொழியை முன்னோர்களின் தாய்மொழியாகக் கொண்டவர்களும், குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஸ்பெயின் மொழி பேசும் மக்கள், “ஹிஸ்பெனிக்ஸ்” என அமெரிக்காவில் அழைக்கப்படுகின்றார்கள்.
ஸ்பெயின் மொழி பேசக் கூடியவர்
ஸ்பெயின் மொழி பேசும் வல்லமை படைத்த வழக்கறிஞரான டிம் கெய்ன் (படம்), அமெரிக்காவில் வாழும் ஹிஸ்பெனிக்ஸ் சமூகத்தினரின் ஆதரவைத் திரட்டுவதன் மூலம், ஹிலாரியின் பிரச்சாரத்திற்குப் பெரிதும் துணையாக இருப்பார் என நம்பப்படுகின்றது. இந்த முறை, ஹிஸ்பெனிக்ஸ் சமூகத்தின் வாக்குகள் அமெரிக்க அதிபருக்கான வெற்றியாளரை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றும் என கணிக்கப்படுகின்றது.
மேலும், வெர்ஜினியா மாநிலத்தின் வாக்குகளைப் பெறுவதிலும் டிம் கெய்ன் முக்கியப் பங்காற்றுவார்.
வெளிநாட்டுக் கொள்கையில் சிறந்த கொள்கைகளும், நோக்கங்களும், கொண்ட திறமையாளர் என்பதோடு, வழக்கறிஞராகவும் இருப்பதால் வாதாடும் திறன் படைத்தவராக டிம் கெய்ன் திகழ்கின்றார்.
18 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற, 58 வயதான டிம், வெர்ஜினியா மாநிலத்திலுள்ள ரிச்மோண்ட் நகரத் தலைவராக (மேயர்) 1998இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006இல் மாநில ஆளுநராக (கவர்னர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2012இல் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை எந்தவொரு தேர்தலிலும் டிம் கெய்ன் தோல்வியடைந்ததில்லை என்பதும் அவரது திறமைக்கு மற்றொரு சான்றாகத் திகழ்கின்றது.
பெருமை வாய்ந்த ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் சட்டத் துறையில் படித்துப் பட்டம் பெற்றவர் டிம் கெய்ன் என்பது அவரது மற்றொரு அங்கீகாரமாகும்.