கோலாலம்பூர் – மலேசியத் தமிழர்களின் பின்புலத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கபாலி திரைப்படம் உலகம் எங்கும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மலேசியத் தமிழர்களின் வாழ்வியலும், பிரச்சனைகளும், உலக மக்களின் முன் தற்போது வைக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ளன.
நேற்று தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பேட்டியளித்த கபாலி படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் மலேசியத் தமிழர்கள் இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறியிருந்தார்.
செல்லியலில் அந்த செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, மலேசிய நாட்டின் பிரபல மூத்த எழுத்தாளர் சை.பீர் முகம்மது, தனது முகநூல் பதிவில் கபாலி படத்தின் கதை உருவாக்கத்தில் நமது நாட்டின் எழுத்தாளரும் வல்லினம் இணையத் தளத்தின் ஆசிரியருமான ம.நவீன் (படம்-முகப்பு) முக்கியப் பங்காற்றியிருக்கின்றார் எனத் தெரிவித்திருக்கின்றார்.
சை.பீர்முகம்மதுவின் (படம்) அந்த முகநூல் பதிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“கபாலியின் மலேசியப் பகுதி கதையை நமது வல்லினம் ஆசிரியர் ம.நவீன் எழுதியுள்ளார். கிள்ளானில் நடந்த முதல் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம், சீனர்களுக்கு அதிக சம்பளமும் தமிழர்களுக்கு குறைவாகவும் தரப்படுவதை எதிர்த்து நடைபெற்றது.கபாலியில் வரும் கதையை அந்தப் பகுதி மட்டுமல்லாது மலேசியப் பகுதியை நவீனே பங்களிப்பு செய்துள்ளார்.
மொத்தப்படத்தில் 20/: சதவிகிதம் நவீனின் பங்களிப்பே. வரதராஜு அவர்கள் கிள்ளான் போராட்டத்தை தனி நூலாக பல ஆய்வுகளுக்குப்பிறகு எழுதினார் என்பது கூடுதல் தகவல். ஒரு பெரிய படத்தில் நமது மலேசிய எழுத்தாளரை பயன்படுத்தி இருப்பது நமக்கு பெருமைதானே? நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நவீன்”
-என சை.பீர்முகம்மது கருத்து தெரிவித்துள்ளார்.
நவீனின் பதில் கருத்து
சை.பீர்முகம்மதுவின் கருத்துக்குப் பதிலளித்துள்ள நவீன், கபாலி கதைஉருவாக்கத்தில் பங்கேற்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் பின்வருமாறு தனது முகநூல் கருத்தைப் பதிவு செய்துள்ளார்:
“மிகச்சிறிய பகுதிதான். அரசியல் சிக்கல் குறித்து கொஞ்சம் பங்களித்தேன். நன்றி.”
“கோவா” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது, அந்தப் படத்தின் உதவி இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றிய இரஞ்சித் அப்போது தான் கேள்விப்பட்ட, மலேசியத் தமிழர்களின் அடிப்படையாக வைத்துத்தான் ‘கபாலி’ படத்தின் கதை உருவாக்கப்பட்டதாக பல பேட்டிகளில் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.
பல மலேசிய நடிகர்கள், கலைஞர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ள கபாலி படத்தில் மலேசிய எழுத்தாளர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளதன் மூலம், கபாலி திரைப்படம் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியுள்ளது எனலாம்.