சிட்னி – மாயமான எம்எச்370 விமானம், இறுதியாகக் கடலில் விழுந்த போது, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது என ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
போயிங் நிறுவனமும், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை தரவு பகுப்பாய்வும் இது குறித்து கூறுவது என்னவென்றால், விமானிகளில் ஒருவர் அல்லது இரண்டு பேருடைய செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், விமானம் அதிவேகத்தில் நிலைக்குத்தாக கடலில் பாய்ந்துள்ளது என்பதுதான்.
மேலும், போயிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எச்370 விமானம் எண்ணெய் தீர்ந்தவுடன், அதன் இயந்திரத்தில் புகை ஏற்பட்டுள்ளது, கடலில் விழுவதற்கு முன்பு அதன் வேகம் சற்று குறைந்துள்ளது. எனினும், 35,000 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த போது நிமிடத்திற்கு 12,000 அடியிலிருந்து 20,000 அடி வேகத்தில் பாய்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறையும், விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு அனுப்பப்பட்ட தரவுகளின் அடிப்படையில், விமானம் நிலைக்குத்தாக கடலில் பாய்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.