சென்னை – 41 வயதுக்குள், ஏறத்தாழ 1500 பாடல்கள், கவிதைகள், நூல்கள் என தமிழுக்கு அணி சேர்த்து – தமிழ் மொழியை செம்மைப் படுத்தி, செழுமைப் படுத்திய கவிஞர் நா.முத்துகுமார், இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால், இன்னும் எத்தனை அழகிய – தமிழை வளப்படுத்தும் கவிதைகளை, பாடல்களை வாரிவழங்கியிருப்பார் என எண்ணி நெஞ்சம் ஒரு முறை பதறத்தான் செய்கின்றது.
அந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, எண்ணற்ற எதிர்காலத் தமிழ்க் கவிதைகளைத் தனக்குள் சேமித்து வைத்திருந்த எதிர்காலப் பெட்டகம்தான் நேற்று, சென்னையின் வேளங்காடு மின்சுடலையில் எரியூட்டி, சாம்பலாக்கப்பட்டதோ என்ற சோகம் நம்மை ஒரு கணம் புரட்டிப் போடுகின்றது.
இதே நெஞ்சப் பதைபதைப்பும், சோகமும், நேற்று முத்துகுமார் மறைவு குறித்து அனுதாபச் செய்திகள் வழங்கிய ஒவ்வொரு தமிழகப் பிரபலங்களின் வார்த்தைகளிலும் வெளிப்படவே செய்தன.
வாலி, வைரமுத்துவுக்கு இடையில் வந்து கவிதைக் கடை விரித்தவர்
காஞ்சிபுரத்தில் உதித்த இந்த கவிதை மகன் முதலில் இயக்குநராகத் திரையுலகில் பரிணமிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் திரையுலகில் கால் பதித்தவர். மறைந்த இயக்குநர்-ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவுடன் நான்கு ஆண்டுகள் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கின்றார்.
முத்துகுமார் இறுதிச் சடங்கில் இயக்குநர் வசந்த்…
தமிழ் இலக்கிய ஆர்வம், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற கல்வி ஆளுமை ஆகியவற்றால், திரைப்படப் பாடல் எழுதும் ஆர்வத்துடன் தனது திசைகளை மாற்றினார் முத்துகுமார்.
கண்ணதாசனுக்குப் பிறகு, தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து என்ற இரு கவிதை மாமலைகளுக்கு இடையில் கடைவிரிக்க வந்த பல கவிஞர்கள் ஏதோ, ஓரிரு பாடல்களால் புகழ்பெற்றனரே தவிர, வரிசையாக, தனது கவிதா மேன்மையால் கால் பதித்தவர்கள் யாருமே இல்லை.
இவர்களுக்கு மத்தியில்தான் சாதாரண உருவத்தோடு, கம்பீரம், கவிஞருக்கே உரிய செருக்கு, என எதுவுமின்றி திரையுலகில் புயலென தனது பாடல்களால் புரட்சி செய்தார் முத்துகுமார்.
இது அவரது மரணத்துக்காக கௌரவத்துக்கு எழுதப்படும் வரிகளல்ல! ஆராய்ந்து பார்த்தால் அதுதான் உண்மை! வரிசையாக தனது பாடல்களால் தனது கவிப் புலைமையை அழுத்தமாகப் பதித்தார் முத்துகுமார்.
பல இசையமைப்பாளர்கள் அவரைத் தேடி வந்ததும், அவரது பாடல்கள் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டு முறை அவர் தேசிய விருதைப் பெற்றதும், அவரது கவிதா ஆளுமைக்கான சான்றுகளாகும்.
அறுபது வயதைக் கடக்கும் வைரமுத்து, சிறந்த திரைப்படப் பாடல்களுக்கான தேசிய விருதை ஆறு முறை தமிழுக்குப் பெற்றுத் தந்திருக்கின்றார் என்ற பெருமை ஒருபுறம் என்றால், 41 வயதுக்குள் இரண்டு முறை தேசிய விருதை தமிழுக்கு வாங்கித் தந்தவர் நா.முத்துகுமார். இவரும் 60 வயது வரை வாழ்ந்திருந்தால், வைரமுத்துவையும் மிஞ்சும் வண்ணம் தேசிய விருதுகளை வாரிக் குவித்திருப்பாரோ என்ற ஆதங்கம் நமக்குள் எழாமல் இல்லை.
தொடக்க காலத்தில் போராட்ட வாழ்க்கை
நா.முத்துகுமார், இதுவரை 1,500 பாடல்கள் எழுதியிருந்தாலும், புகழ் பெற்றிருந்தாலும் ஆரம்ப காலத்தில் அவரும் தனது கவிதைகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்திருக்கின்றார் என்பதை பல கட்டுரைகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களை ஆட்டுவிக்கும் நிதி வறட்சி அவரையும் பாதித்திருக்கின்றது.
முதன் முதலாக தான் பதிப்பித்த கவிதை நூல் கடைகளில் தொங்கியதைப் பார்த்துப் பூரித்துப்போன அவர், அதே கவிதை நூல்கள் நாட்கள் பல கடந்தும் விற்பனையாகாமல், கடைகளில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்ததாகக் கூறியிருக்கின்றார்.
ஆனால் பிற்காலத்தில், எழுதிய பல நூல்கள் அதிகமான அளவில் விற்பனையாகின. அவர் எழுதிய திரைப்படப்பாடல்களும் அவருக்கு கணிசமான சன்மானத்தைப் பெற்றுத் தந்தன.
முத்துகுமாருக்கு முகவரி தந்த சுஜாதா
அவருக்கு முகவரி தந்தவர்களில் ஒருவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா (படம்) என்பது மற்றொரு சுவாரசியமானத் தகவல்.
ஒரு நிகழ்ச்சியில் சுஜாதா கலந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது, தான் படித்து இரசித்த ஒரு கவிதையை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
அந்தக் கவிதை இதுதான்:-
தலைப்பு : தூர்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க!
இந்தக் கவிதையை அந்த நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய சுஜாதா, இதை எழுதியது ‘நா.முத்துகுமார்’ என்பவர் என்று கூறி, அந்த நா.முத்துகுமார் இந்தக் கூட்டத்தில் ஏதாவது இருக்கிறாரா எனக் கேட்க, அதிர்ஷ்டவசமாக, அந்தக் கூட்டத்திலேயே இருந்திருக்கிறார் முத்துகுமார். உடனே கைதூக்கி அந்தக் கவிதை எழுதியது நான்தான் என முத்துகுமார் கூற, அவரை உடனே மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி பாராட்டியிருக்கின்றார் சுஜாதா. அப்போது முத்துகுமார் சினிமாவில் பிரபலமாகாமல் இருந்த காலகட்டம்!
அதே மேடையில், பிரமுகர் ஒருவர் முத்துகுமாருக்கு அவரது கவிதைக்காக ஆயிரம் ரூபாய் தந்து அகமகிழ்ந்திருக்கின்றார்.
பின்னாளில் இந்த சம்பவத்தை பல தருணங்களில், பல பேட்டிகளில் கூறியிருக்கின்றார் முத்துகுமார்.
இதற்கு முன் இளம் வயதில் காலமான பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்துக்குப் பின்னர், தனது இளவயது மரணத்தால் அதிக தாக்கத்தை தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியவர் முத்துகுமார் என்றால் அது மிகையாகாது.
முத்துகுமாருக்கு தனது கவிதை வரிகளால் அஞ்சலி செலுத்திய கவிப்பேரரசு வைரமுத்து, “கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்” என்று கூறி முத்துகுமாருக்கும், அவரது கவிதை வரிகளுக்கும் சக கவிஞராக கௌரவம் சேர்த்திருக்கின்றார்.
நா.முத்துகுமாரின் கவிதை, திரைப்படப் பாடல் ஆதிக்கம் நீண்ட நாட்களுக்கு தமிழ் உலகிலும், தமிழ்த் திரையுலகிலும் நீடித்திருக்கும், பலரது மனங்களையும் ஆக்கிரமித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
-இரா.முத்தரசன்