Home Featured நாடு ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!

ஜிக்கா பரிசோதனைக்கு முக்கிய மருத்துவமனைகள் தயார் நிலையில் – சுப்ரா அறிவிப்பு!

1125
0
SHARE
Ad

subra dr-press conf-29 aug-zika

புத்ரா ஜெயா – நேற்று சிங்கப்பூர் நாட்டில் ஏறக்குறைய 41 பேருக்கு ஜிக்கா வைரஸ் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்நோய் மலேசியாவிலும் பரவக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால், மலேசியாவின் முக்கிய மருத்துவமனைகள் அனைத்தும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

“இந்நோய் 20% அளவில் கண்டிருக்கக்  கூடியவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, கண் சிவத்தல், உடலில் அரிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்படும். அதே நேரத்தில் 80% அளவில் நோய் கண்டிருக்குமேயானால் எவ்வித அறிகுறிகளும் தென்படாது. மாறாக, அவர்களது உடலில் கிருமிகள் பரவியிருப்பதோடு ஏடிஸ் கொசுக்களின் தாக்கம் வழியாகப் பிறருக்கு இந்நோய் பரவக்கூடிய சாத்தியங்கள் இருக்கும்” என இன்று சுகாதார அமைச்சில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஇகா தேசியத் தலைவருமான டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆரம்பத்தில் பிரேசில் நாட்டில் இந்நோயின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் சமீபத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக பிரேசில் நாட்டிற்குச் சென்று திரும்பியிருக்கும் மலேசிய விளையாட்டளர்கள் மீது இந்நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில் மலேசிய விளையாட்டாளர்கள் அனைவரும் இந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டிருப்பதாகவே முடிவுகள் வந்துள்ளன. அதேநேரத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் பிரேசில் நாட்டிற்குச் சென்றிருந்த மலேசியர்கள் தன்னார்வ அடிப்படையில் இந்நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்” என்றும் சுப்ரா மேலும் கூறியுள்ளார்.

“சிங்கப்பூரின் அண்டை நாடாக இருக்கும் மலேசியாவில் இந்நோய் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இதனைத் தடுப்பதற்கு முதலில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி செய்யக்கூடிய இடங்களைத் துரிதமான முறையில் குறைக்க வேண்டும். இதன்வழி ஏடிஸ் கொசுக்கள் பரவுவதற்கான சாத்தியத்தைக் குறைக்க முடியும். அதனைத் தொடர்ந்து, யாருக்கேனும் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாகத் தகுந்த மருத்துவ பரிசோதனையோடு இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான இரத்தப் பரிசோதனைகள் நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பெரிய மருத்துவமனைகளிலும் செய்யக்கூடிய வசதிகள் எற்பாடு செய்யப்படுள்ளது” என்றும் கூறிய சுப்ரா, எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்தக்கட்டமாக, ஏடிஸ் கொசுக்களின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் கொசு மருந்துகளைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான உடைகளை அணிதல், போன்ற பாதுகாப்பு அமசங்களைப் பின்பற்றி ஏடிஸ் கொசுக்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்தார்கள் என்றால் கருவில் இருக்கும் குழந்தைக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக, அவர்களின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு நிலை ஏற்படுவதோடு தலை அளவு சிறியதாகவும் இருக்கக்கூடிய அபாயங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதனைத்தவிர்த்து, நரம்பு தொடர்பான பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால், அக்குழந்தைகள் உடல் ரீதியில் மோசமான நிலைக்கு ஆளாவதோடு சுவாசப் பிரச்சனைகளுக்கும் ஆளாக நேரிடும்” என்றும் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பைத் தொடர்ந்து விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

“எனவே, இதனை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். குறிப்பாக, இந்நோய் உடலுறவு கொள்வதன் வழியாகப் பரவக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவைத் தவிர்த்தல் அல்லது பாதுகாப்பு அம்சங்களோடு உடலுறவு கொள்ள வேண்டுமெனவும் ஆலோசிக்கப்படுகின்றனர். ஜிக்கா வைரஸின் அபாயத்தை எல்லோரும் மனத்தில் வைத்துக் கொண்டு இந்நோயின் தாக்கம் நம் நாட்டில் ஏற்படாமல் இருக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் இறங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்றும் சுப்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.