சென்னை – சிறையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி ராம்குமாரின் உடல் தற்போது சென்னை இராயப் பேட்டை பொது மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
அவரது உடலைப் பார்க்க அனுமதி வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் இன்றிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையைச் சுற்றி சாலை மறியல்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம், ராம்குமார் நல்ல மன நிலையில் இருந்ததாகவும் தனது மகன் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நாளை திங்கட்கிழமை ராம்குமாரின் பிணை (ஜாமீன்) விண்ணப்பம் மீதான விசாரணை நடைபெற வேண்டிய சூழ்நிலையில் இன்று ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
சிபிஜ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையைத் தாங்கள் கோரியுள்ளதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படாமல் தாங்கள், ராம்குமாரின் உடலைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவரது தந்தை பரமசிவம் உறுதிபடக் கூறியுள்ளார்.