கோலாலம்பூர் – அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளதால், டிபிபி ஒப்பந்தம் ( Trans Pacific Partnership) திரும்பப்பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்கும் வரையில் மலேசியா அது குறித்து பொறுமை காக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அனைத்துலக வர்த்தக மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட் கூறுகையில், “வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் வரையில், மலேசியா இவ்விவகாரத்தில் பொறுமை காக்கும். அதுவரையில் டிபிபி ஒப்பந்தம் திரும்பப் பெறப்படுமா? இல்லையா? என்ற முடிவு எடுக்கப்படாது” என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார்.
மேலும், பெருவில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் டிபிபி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகளுடன் இது குறித்து மலேசியா தனியாக சந்திப்பு ஒன்றை நடத்தும் என்றும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.