மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்பட்ட இந்தூர் – பாட்னா எக்ஸ்பிரஸ் இரயில் கடந்த நவம்பர் 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புக்ரயான் என்ற இடம் அருகே சென்று கொண்டு இருந்த போது தடம் புரண்டது.
இக்கோர விபத்தில் 150 பேர் பலியாகினர், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த இரயில் விபத்துகளில் மிகப் பெரிய இரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் இச்சம்பவத்தை விசாரணை செய்ய கிழக்கு இரயில்வே பாதுகாப்பு ஆணையர் பி.கே. ஆச்சார்யா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரயிலை இயக்கிய ஜானக் சர்மா, பிரமேஷ் புரோகித் ஆகிய இருவரும் மது அருந்தி இருந்ததாக இரயிலின் காவலர் அஜய் ஸ்ரீவஸ்த்தவா, விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.