கோலாலம்பூர் – சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி இணையம் வழி நடத்தப்பட்ட கையெழுத்து ஆதரவு போராட்டத்திற்கு இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவு தந்துள்ளனர்.
மரியாவை விடுதலை செய்வதற்கும், சொஸ்மா சட்டத்தை ரத்து செய்வதற்கும் ஆதரவு கோரி இந்த கையெழுத்து போராட்டம் இணையம் வழி நடத்தப்பட்டது.
மேலும் மரியாவின் விடுதலைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மரியாவின் கைது பற்றிக் கருத்து தெரிவித்த காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், பெர்சே அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் வழி கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் காரணமாகவே மரியா சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மாறாக, பெர்சே பேரணியை வழிநடத்தியதற்காக அல்ல என்றும் கூறியுள்ளார்.
மரியாவின் விடுதலைக்காக நீதிமன்றப் போராட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்யக் கோரும் ஆட்கொணர்வு மனு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.