Home Featured நாடு இருமொழித் திட்டம்: “மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை” கமலநாதன்!

இருமொழித் திட்டம்: “மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை” கமலநாதன்!

1572
0
SHARE
Ad

kamalanathanகோலாலம்பூர் – தாய்மொழிப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் “இந்தத் திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக, பெற்றோர்களின் எழுத்துபூர்வமான சம்மதத்துடனே அமுல்படுத்தப்படுகிறது” என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளையில் பள்ளிகள் இருமொழித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதற்கான தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா, போதுமான வகுப்பறைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இருமொழித் திட்ட அமுலாக்கத்தின் கீழ் வரும் பள்ளிகள் விஞ்ஞானம், கணிதம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை ஆங்கிலம், மலாய், தமிழ் அல்லது மாண்டரின் மொழிகளில் மாணவர்கள் பயில்வதற்கு விருப்பத் தேர்வு வழங்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“யார் மீதும் திணிக்கப்படவில்லை”

dlp-dual-language-logo_full

நேற்று முன்தினம் புதன்கிழமை (4 ஜனவரி) பங்சார் தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்த பின்னர், பத்தரிக்கையாளர்களிடம் பேசிய கமலநாதன் “இருமொழித் திட்டத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் குழுக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் கல்வி அமைச்சு மதிக்கின்றது. ஆனால் அதே வேளையில், இருமொழித் திட்டம் ஜனநாயக முறைப்படி பெற்றோர்களின் விருப்பத் தேர்வு அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது. யார் மீதும் திணிக்கப்படவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்புகளுக்குத் தவறாக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

கமலநாதன் தெரிவித்திருக்கும் கருத்துகளை ‘ஸ்டார்’ ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலைநகர் செயிண்ட் ஜோசப் தமிழ்ப் பள்ளியை உதாரணம் காட்டிய கமலநாதன், அந்தப் பள்ளியில் இருமொழித் திட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்பாக, அந்தப் பள்ளியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் 36 மாணவிகளின் பெற்றோர்களிடத்திலும் இருமொழித் திட்டத்திற்கு எழுத்துபூர்வமான ஒப்புதல் கையெழுத்தை அந்தப் பள்ளி பெற்றிருக்கின்றது.

“பெற்றோர்கள் இருமொழித் திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை விடுக்கும்போது நாங்கள் எப்படி மறுக்க முடியும்? என்றும் கமலநாதன் கேள்வி எழுப்பினார்.

இந்த வருடம் 50 தமிழ்ப் பள்ளிகள் இருமொழித் திட்டத்தை, முதலாம் வகுப்பிலும், நான்காம் வகுப்பிலும் அமுல்படுத்த தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஒப்புதல் தந்துள்ளன.

1,200 பள்ளிகள் பங்கு பெறுகின்றன

கல்வி அமைச்சு நிர்ணயித்துள்ள, வரைமுறைகளுக்கு இணங்கி இதுவரை 1,200 பள்ளிகள் நாடளாவிய நிலையில் இருமொழித் திட்டத்தை அமுல்படுத்த முன்வந்துள்ளன என்றும் கமலநாதன் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் அமுலாக்கத்தினால், தமிழ் பேச முடியாத ஆசிரியர்கள் இருமொழித் திட்டத்தின் கீழ்வரும் பாடங்களைக் கற்பிக்கும் நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படும் எதிர்ப்புகளுக்கு பதிலளித்த கமலநாதன், இது ஒரு பிரச்சனையில்லை, காரணம் பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டாலும், அதனைத் தமிழில் விளக்கிக் கூறும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.

noor_azimah_abdul_rahim_page_இருமொழித் திட்டத்திற்கு ஆதரவாக ‘பேஜ்’ எனப்படும் “கல்விக்கான பெற்றோர் செயல் குழு”-வின் தலைவரான டத்தின் நூர் அசிமா அப்துல் ரஹிம் (படம்) தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இடைநிலைப் பள்ளிகளுக்கு செல்லும்போது இந்தப் பாடங்களை மாணவர்கள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதிருப்பதால், கல்வியில் தொடர்ச்சியை எதிர்பார்க்கும் பெற்றோர்கள், இருமொழித் திட்டத்திற்கு மாறுவதே சிறந்தது என நூர் அசிமா வலியுறுத்தியுள்ளார்.

“கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களின் விருப்பத் தேர்வுகளை அவர்களின் பெற்றோர்கள் எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும். குறைந்தது 15 மாணவர்கள் ஆதரவு தெரிவித்தால் அந்தப் பள்ளியில் இருமொழித் திட்டம் அமுலாகும். எனவே, இது மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பத் தேர்வு சம்பந்தப்பட்டது. மாறாக, அரசியல்வாதிகள் மற்றும் போராட்டவாதிகளின் விருப்பத் தேர்வு அல்ல” என்றும் நூர் அசிமா மேலும் கூறியுள்ளார்.

-இரா.முத்தரசன்