கோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றும் 37 வயது நபர் உட்பட ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி, குவாந்தான், பகாங் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் இந்தோனிசியர் ஒருவரையும், வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வரும் 32 வயதான மலேசியரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்களிடமிருந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சில பொருட்களையும், துப்பாக்கியையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இவர்கள் இருவரும் குடும்பத்தோடு சிரியாவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி 29-ம் தேதி கோலாலம்பூரில் 38 வயதான மலேசியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இவர் கோலாலம்பூரில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டியர் என்பது விசாரணை தெரிய வந்துள்ளது.
சந்தேகத்திற்கு இடமான இந்த மூவரும் தற்போது பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 2012 (சொஸ்மா)-ன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.