கோலாலம்பூர் – முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்கு இடையில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைகளில் எந்தத் தடையும் இல்லையென கூட்டரசுப் பிரதேச முஃப்தி டத்தோ டாக்டர் சுல்கிப்ளி மொகமட் அல் பக்ரி தெரிவித்திருக்கிறார்.
மனித வாழ்வுக்குத் துணையாக இருக்கும் உடல் உறுப்புகளுக்கு இயற்கையாகவே இஸ்லாம் அல்லது இஸ்லாம் அல்லாத தன்மை கிடையாது என்றும் சுல்கிப்ளி கூறியிருக்கிறார்.
இது குறித்து சுல்கிப்ளி தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:-
“முஸ்லிம் அல்லாதோரில் உடல் உறுப்புகள் ஒரு முஸ்லிம் உடலில் பொருத்தப்படும் போது, அந்த உடல் உறுப்பு முஸ்லிமின் உடம்பில் ஒரு பகுதியாக மாறிவிடும். பிறகு அல்லாவின் உத்தரவுப் படி அந்த உறுப்பு அதன் செயல்பாட்டைத் தொடரும். முஸ்லிம் அல்லாதோரின் இரத்தமும், உறுப்பும் முஸ்லிம் உடம்பில் சேரும் போது அல்லாஹ் அதனைப் புனிதப்படுத்திவிடுவதால், அவரின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்கும். முஸ்லிம் அல்லாதோரின் உடம்பில் இருந்து பெறப்படும் இரத்தம், அவர் பன்றி இறைச்சி உள்ளிட்ட ஹலால் அல்லாத உணவை சாப்பிட்டிருந்தாலும் கூட, இஸ்லாம் அதை ஏற்றுக் கொள்கிறது. காரணம் அவரது இரத்தத்தை தானே பயன்படுத்துகிறோம். மாறாக பன்றியின் திரவத்தை அல்ல.” என்று சுல்கிப்ளி தெரிவித்திருக்கிறார்.
மேலும், கடந்த 1982-ம் ஆண்டு, ஏப்ரல் 13, 14-ல் நடைபெற்ற தேசிய ஃபாட்வா கவுன்சில் கூட்டத்தில், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு இடையில் இரத்த பரிமாற்றம் செய்வதில் ‘அனுமதிக்கப்படுகின்றது’ என்று கூறப்பட்டிருப்பதையும் சுல்கிப்ளி சுட்டிக் காட்டியிருக்கிறார்.