கோலாலம்பூர் – மலேசியாவிற்கு 4 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத்திற்கு, மலாயாப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சவுதி மன்னரின் புரட்சிகரமான மற்றும் ஆக்கப்பூர்வமான தலைமைத்துவத்தை கௌரவிக்கும் வகையில், மலாயாப் பல்கலைக்கழக வேந்தரும், பேராக் மாநில சுல்தானுமாகிய சுல்தான் நஸ்ரின் முய்சுதின் ஷா, அப்பட்டத்தை சவுதி மன்னருக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கினார்.
“இந்த கௌரவிப்பு, உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களுக்கும், சவுதிஅரேபியாவிற்கும் இடையில் புதிய எல்லைகளைத் திறக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டான்ஸ்ரீ பேராசிரியர் டாக்டர் மொகமட் அமின் ஜலாலுதின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.