கோலாலம்பூர் – மலேசியாகினி இணையத் தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன், கினிடிவி இணையத் தளத்தில் ஆட்சேபத்துக்குரிய சில காணொளி பதிவுகளை பதிவேற்றம் செய்ததற்காக இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் இணையவெளி குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் இதே போன்ற செய்திகளைப் பதிவேற்றம் செய்ததற்காக மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளைக் காணொளி வடிவில் கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பதிவேற்றம் செய்த காரணத்திற்காக பிரமேஷ் சந்திரன் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்றார்.
பிரமேஷ் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் பிணை வழங்கப்படுவதற்கும், அவரது அனைத்துலகக் கடப்பிதழ் முடக்கப்படுவதற்கும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கும் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
எனினும், குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கும் பிரமேஷ், வழக்கு நடக்கும்போது நீதிமன்றம் வருவேன் என உறுதியளித்திருப்பதால் அவரது கடப்பிதழை முடக்க வேண்டியதில்லை என்று தெரிவித்த நீதிபதி, தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவருக்குப் பிணை வழங்கினார்.
அடுத்த இரண்டு வாரங்களில் பிரமேஷ் சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் மலேசிய அரசியல் சாசனத்துக்கு முரணானது என எதிர்வழக்கு தொடுக்கப் போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.