பெங்களூரு – சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆரம்பத்தில், மற்ற கைதிகளைப் போல் தான் சிறையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல சசிகலாவுக்கு சிறையில் ஒரு அலுவலகமே நடத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதனை அண்மையில் டிஜிபி ரூபா அம்பலப்படுத்தினார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ், சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, சிறையில் சசிகலாவுக்கு, விரும்பும் உணவைச் சாப்பிடும் வசதி, சொகுசு மெத்தை, அவரைச் சந்திக்க வருபவர்களுக்கு மேஜை, நாற்காலி என அலுவலகம் போன்ற வசதிகளை செய்து கொடுத்ததாக ரூபா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், டிஜிபி ரூபா திடீரென சிறையில் இருந்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதேவேளையில், குற்றச்சாட்டிற்கு உள்ளான டிஜிபி சத்யநாராயண ராவ் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.