இவ்விழாவிற்கு சுகாதார அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வருகை தந்து நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அவருடன் கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் வருகை தந்தார்.
சுமார் 250,000 ரிங்கிட் அரசாங்க உதவி நிதியைக் கொண்டு இப்பள்ளி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 287 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியின் இணைக் கட்டடச் சீரமைப்போடு, 4 புதிய வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், நூல் நிலையம், கலைக்கல்வி வகுப்பு, சிறிய மண்டபம் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பள்ளி 1947-ஆம் ஆண்டில் சிப்பாங் பூட்டான் தோட்டத்தில் 24 மாணவர்களுடன் தோற்றம் கண்ட நாட்டின் பழமையான பள்ளிகளில் ஒன்றாகும்.
புதிய விமான நிலையம், அதைத் தொடர்ந்து பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் சுற்று வட்டாரங்களில் உருவாகத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து 2009-ஆம் ஆண்டில் சுமார் 300 மாணவர்களையும், 22 ஆசிரியர்களோடும் இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து உயர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப வசதிகளை விரிவாக்கும் பொருட்டு, தற்போது இந்த இணைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.