டோக்கியோ – மனதார விரும்பும் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி, அக்காதலை அவள் ஏற்றுக் கொள்ளும் தருணம் ஓர் ஆணுக்கு நிச்சயம் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணமாகத் தான் இருக்கும்.
அப்படித் தான் இருந்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த 32 வயதான அந்த இளைஞனுக்கு. ஆனால் காதலை வெளிப்படுத்திய அடுத்த சில நிமிடங்களில் உயிரிழக்கப்போகிறோம் என்பதை அவர் அறியவில்லை.
ஜப்பானின் ஓக்கினோவா பகுதியில், மியாக்கூ மற்றும் இராபு தீவுகளை இணைக்கும் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமான இராபு பாலத்தில், நள்ளிரவில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்த அந்த இளைஞன், திடீரென தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது காதலை தோழியும் ஏற்றுக் கொள்ளவே, உற்சாக மிகுதியில் காரை நிறுத்திய அந்த இளைஞர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், பாலத்தின் தடுப்புக்கு போடப்பட்டிருந்த கம்பி வேலியில் காலை வைத்து தவ்விக் குதிக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக வேலியை அவர் தாண்டிவிடவே, அங்கிருந்து 30 மீட்டர் ஆழத்தில் உள்ள கடலில் விழுந்து மாயமாகியிருக்கிறார்.
செய்வதறியாது தவித்த அவரது தோழி, உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, மீட்புக் குழுவினர் வந்து தேடிய போது, கடலில் இருந்து அந்த இளைஞரின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலத்தில் நடந்திருக்கும் முதல் மரணச் சம்பவம் இதுவாகும்.
இச்சம்பவத்தைப் பற்றி அறிந்த ஜப்பான் மக்கள் மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்திருக்கின்றனர்.