Home நாடு மலேசியர்களின் எம்ஜிஆர் பற்று மலைக்கச் செய்கிறது – வெளிநாட்டுப் பேராளர்கள் நெகிழ்ச்சி!

மலேசியர்களின் எம்ஜிஆர் பற்று மலைக்கச் செய்கிறது – வெளிநாட்டுப் பேராளர்கள் நெகிழ்ச்சி!

1111
0
SHARE
Ad

MGR100(1)கோலாலம்பூர் – முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் மீதான மலேசிய இந்தியர்களின் பற்றும் பாசமும் தங்களை மலைக்கச் செய்வதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பேராளர்கள் நெகிழ்ந்தனர்.

எம்ஜிஆர் தோன்றி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் அரங்கில் நேற்று காலை முதல் மாலை வரை அனைத்துலக எம்ஜிஆர் மாநாடும், நூற்றாண்டு விழாவும் மிக விமரிசையாக நடைபெற்றது.

MGR100(2)அவ்விழாவுக்காக சென்னையிலிருந்து குறுகிய கால வருகை மேற்கொண்டு செய்தியாளர்களை சந்திந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “புரட்சித் தலைவரின் வாழ்க்கைத் தத்துவங்களையும் கொள்கைகளையும் இந்நாட்டு இந்தியர்கள் மனதார ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதனை தங்களின் அன்றாட வாழ்க்கை நீரோட்டத்திலும் கடைபிடித்து வருகிறார்கள் என்பதை இன்று அவர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை வைத்துப் பார்க்க முடிகிறது” எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

MGR100(4)தமிழகத்தின் பிரபல தொழிலதிபரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கலைமாமணி டாக்டர் விஜிபி சந்தோசம், 20 பேராளர் குழுவோடு இம்மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பேராளர் குழுவும் மலேசியர்களிடையே பரவியிருக்கும் எம்ஜிஆர் பற்றைக் கண்டு வியந்தனர்; பாராட்டு தெரிவித்தனர்.

MGR100மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க வந்த மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஆறரை அடி உயரமுள்ள எம்ஜிஆர் உருவச்சிலையையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அச்சிலையை விஜிபி சந்தோசம் அன்பளிப்பு செய்தார்.

மாநாட்டை மிகச் சிறப்பாக வடிவமைத்த மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகத்தையும் ஏற்பாட்டுக் குழுவையும் வெகுவாகப் பாராட்டினார்.

இம்மாநாட்டின் வழி, எம்ஜிஆரின் கொள்கைகளையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் பற்றி ஆழமாக சிந்திக்க முடிகிறது என்றும் இது புதிய தலைமுறையினருக்கு பெறும் பயனாக அமையும் எனவும் அமைச்சர் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

MGR100(3)இந்நிகழ்ச்சியில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோஶ்ரீ சைட் இப்ராகிம், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மேதகு டி.எஸ். திருமூர்த்தி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மோகன்தாஸ், பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், மலாயாப் பல்கலைக்கழக துணைப்பதிவதிகாரி புண்ணியமூர்த்தி, ரத்தினவள்ளி அம்மையார் உட்பட வட்டார பிரமுகர்களும் தொழிலதிபர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் எம்ஜிஆர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பட்டிமன்றமும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.