கோலாலம்பூர் – வரும் ஜனவரி 6-ம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில், காலை 10 மணி தொடங்கி இரவு வரை நடைபெறவிருக்கும் தென்னிந்திய நட்சத்திரக் கலைவிழாவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமை தாங்கி நடத்தி வைப்பார் என இப்பிரம்மாண்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான மைஈவண்ட்ஸ் நிறுவனர் ஷாகுல் ஹமீட் நேற்று புதன்கிழமை மாலை தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 2 மணி நேரங்கள் பிரதமர் நஜிப் கலந்து கொண்டு சிறப்பிப்பார் என்றும் ஷாகுல் குறிப்பிட்டார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்குபெறும் இம்மாபெரும் விழாவில் பல்வேறு சுவாரசிய நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாகவும் ஷாகுல் தெரிவித்தார்.
அதேவேளையில், ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரும் இந்நிகழ்ச்சியில் பிரத்யேகமாக வெளியீடு காணவிருப்பதாகவும் ஷாகுல் குறிப்பிட்டார்.
தற்போது இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை பரபரப்பாக இணையம் வழியாகவும், நேரடி விற்பனையாகவும் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகை குஷ்பு, நடிகர் நந்தா, மனோபாலா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் நட்சத்திரக் கிரிக்கெட், காற்பந்துப் போட்டிகள் உள்ளிட்டவைகளோடு, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு புதிய சுவாரசிய அங்கங்கள் இடம்பெறும் என்று குறிப்பிட்டார்.
எனவே, ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் காலை தொடங்கி இரவு வரை இருந்து கண்டு ரசிக்கலாம் என்றும் நாசர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, தற்போது ரஜினி, கமல் இருவரும் அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் கட்டாயம் கலந்து கொள்வார்கள் என உறுதியளித்தார்.