கோலாலம்பூர் – இருமொழிப் பாடத் திட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தாலும் கூட, கல்வி அமைச்சில் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை பள்ளிகளில் அப்பாடத்திட்டம் தொடர்ந்து வருகின்றது.
அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களை இன்று வியாழக்கிழமை சந்தித்து இருமொழிப் பாடத்திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ பி. கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.
சிலாங்கூரில் பெரும்பாலான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிகளில் இருமொழிப் பாடத்திட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதாக ‘தி ஸ்டார்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.
கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை பள்ளிகளில் மலாய் மொழி அல்லது ஆங்கிலம் என இருமொழிகளில் மாணவர்கள் படிக்க வகை செய்யும் இருமொழிப் பாடத்திட்டம் (Dual Language Programme -DLP) தொடங்கிய முதலே தமிழ், சீனப் பள்ளிகளின் தரப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.