
புத்ரா ஜெயா – 2018 தொடங்கியிருக்கும் வேளையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு நேற்று புதன்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமை தாங்கினார்.
மலேசிய அமைச்சரவைக் கூட்டம் வழக்கமாக புதன்கிழமைகளில் நடைபெறும்.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமரை துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியும் மற்ற அமைச்சர்களும் வரவேற்றனர்.
மேற்கண்ட படத்தைத் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் “புத்தாண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம். அனைவரும் உற்சாக உணர்வுடன் இருக்கிறோம். மலேசியாவை அனைத்து மக்களுக்கும் உரிய சிறப்பான நாடாக உருவாக்கக் கடுமையாக உழைக்கிறோம்” எனவும் கருத்து தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் நேற்று கலந்து கொண்டார்.
நேற்று இரவு தேசிய முன்னணியின் 14-வது பொதுத் தேர்தலுக்கான இணையத் தளத்தை தொடக்கி வைத்ததோடு அதன் பின்னர், தேசிய முன்னணியின் உச்ச மன்றக் கூட்டத்திற்கும் பிரதமர் தலைமை வகித்து நடத்தினார்.
தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தில் 14-வது பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.