பத்துமலை – நேற்று புதன்கிழமை காலையில் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பத்துமலைக்கு வருகை மேற்கொண்ட துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, இந்தியர்கள் அரசாங்கத்துடனான கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு தர முன்வரவேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
அரசாங்கத்துடன் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து விடுங்கள் – ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிடுங்கள். அடுத்து வரவிருக்கும் ஒரு மிக முக்கியமான நாளில் (பொதுத் தேர்தலில்) அரசாங்கத்தை ஆதரித்து வாக்களியுங்கள் என்றும் சாஹிட் கேட்டுக் கொண்டார்.
பத்துமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் சாஹிட் ஹாமிடி உரையாற்றினார். இதே நிகழ்ச்சியில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா ஆகியோரும் உரையாற்றினர்.
மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு தம்பதியர், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகாபால மோகன் ஆகியோரும் பத்துமலையில் நடைபெற்ற இந்த சிறப்பு நிக்ழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி, அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பத்துமலையில் இந்தியக் கலாச்சார மையம் ஒன்று நிர்மாணிக்கப்பட கூடுதலாக இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டையும் சாஹிட் ஹமிடி நிகழ்ச்சியில் பேசும்போது அறிவித்தார்.
வழக்கமாக பத்துமலைத் தைப்பூசத்தில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் நஜிப் இந்தமுறை கோலசிலாங்கூர் தைப்பூசத் திருவிழாவில் கலந்து சிறப்பித்தார்.