ஜோர்ஜ் டவுன் – தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்த 14 வயதான எம்.வசந்தப்பிரியா குறித்த விசாரணைகளில் எந்த அம்சங்களும் மூடி மறைக்கப்படாது என்றும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என வசந்தப் பிரியாவின் குடும்பத்தினருக்கு கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உறுதியளித்தார்.
தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கல்வி அமைச்சு காவல் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.
“வசந்தப் பிரியாவின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் இத்தகைய முறையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ள அந்த மாணவியால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் சோகமடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் கமலநாதன் கூறியுள்ளார்.
ஒரு செல்பேசியைத் திருடியதாக வசந்தப்பிரியா மீது அவரது ஆசிரியை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரது செயல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட காயங்கள், மூளைப் பாதிப்பு ஆகியவற்றால் அவருக்கு மரணம் நேர்ந்துள்ளது.