Home உலகம் பயணத் தடயங்களை மூடி மறைத்த ஜோ லோ’வின் உல்லாசப் படகு!

பயணத் தடயங்களை மூடி மறைத்த ஜோ லோ’வின் உல்லாசப் படகு!

1031
0
SHARE
Ad
இந்தோனிசியாவின் பாலி தீவு அருகில் அமெரிக்காவின் எப்.பி.ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் படகு

ஜாகர்த்தா – கடந்த பல மாதங்களாகவே ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வந்தது 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ என்ற மலேசியக் கோடீஸ்வரரின் ‘யாட்’ (Yacht) என்ற பெரிய உல்லாசப் படகு. சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர உல்லாசப் படகு இது என ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

நேற்று இந்தோனிசியாவின் கடல் பகுதியில் நங்கூரமிட்டிருந்த இந்தப் படகை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ-யின் உத்தரவுப்படி இந்தோனிசிய அரசாங்கத்தின் அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

தற்போது மலேசிய அரசியல் அரங்கில் பிரச்சார மேடைகளில் ஒரு மையப் பொருளாகவும் இந்த ஆடம்பர உல்லாசப் படகு உருவெடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தப் படகுக்கு ‘இக்குனாமிட்டி’ (Equanimity) எனப் பெயர் சூட்டியிருந்தார் ஜோ லோ. ஆங்கிலத்தில் இக்குனாமிட்டி என்பதற்கான அர்த்தம் “சலனமற்ற அமைதி” என்பதாகும். ஆனால், ஜோ லோவின் பணக்கார – வணிக நண்பர்களின் கேளிக்கைகளுக்கான மையமாகத் திகழ்ந்து வந்த இந்தப் படகு கடந்த பல மாதங்களாக ஆர்ப்பரிக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் சிக்கி ஒரு குற்றவாளியைப் போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது.

1எம்டிபி விவகாரத்தினால் மலேசியாவிலிருந்து ஓடி ஒளிந்து கொண்ட – தலைமறைவாகிவிட்ட – ஜோ லோ இந்தப் படகில் இருந்து கொண்டுதான் தனது தலைமறைவு வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருந்தார் என்றும், பல பிரமுகர்களோடு தொடர்பில் இருந்தார் என்றும், சந்திப்புகளை நடத்தி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வாழ்க்கையும் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

நேற்று புதன்கிழமை இந்தப் படகு கைப்பற்றப்பட்ட பிறகு அதன் விவரங்கள் மற்றும் அதன் கணினி இயக்க உள்ளடக்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக இதுபோன்ற படகுகள் கடலில் எந்தப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கின்றன,எந்த இலக்கை நோக்கிச் செல்கின்றன என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வதற்காக அந்தப் படகில் “தானியங்கி பயணத் தடயம் காட்டும்” (Automated Identification System) சாதனம் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆனால், அந்த சாதனம் பொருத்தப்பட்டிருந்தும் அதன் இயக்கம் இந்த உல்லாசப் படகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக, இந்தப் படகு எங்கிருக்கிறது என்பதை இதனைத் தேடுபவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்தப் படகு மர்மமான முறையில் செயல்பட்டிருக்கிறது.

இக்குனாமிட்டி கைப்பற்றப்பட்டபோது அதில் இருந்த 34 பணியாளர்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அந்த சமயத்தில் ஜோ லோ அந்தப் படகில் இல்லை.

இதைத் தொடர்ந்து பணியாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பபட்டு வருகின்றன. அந்தப் படகின் அதிகாரபூர்வ உரிமையாளர் யார், இந்தோனியக் கடல் பகுதியில் யாருடைய கட்டுப்பாட்டில் அந்தப் படகு இயங்கிக் கொண்டிருந்தது என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கூடிய விரைவில் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தப்படும் என இந்தோனிசிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றன.

எனவே, கூடிய விரைவில் இக்குனாமிட்டி குறித்த மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு