Home நாடு “நஸ்ரி ஆணவமாகவும், நன்றியின்றியும் நடந்து கொள்கிறார்”

“நஸ்ரி ஆணவமாகவும், நன்றியின்றியும் நடந்து கொள்கிறார்”

1279
0
SHARE
Ad
தியோங் கிங் சிங் – சரவாக் பிந்துலு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்

கூச்சிங் – ரோபர்ட் குவோக் மற்றும் அமைச்சர் நஸ்ரி இடையிலான சர்ச்சைகள் தேசிய முன்னணி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்களின் மையப் புள்ளியாக தொடர்ந்து நீடித்து வருகின்றன.

தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான எஸ்பிடிபி எனப்படும் சரவாக் புரொக்ரெசிவ் டெமோக்ரெடிக் பார்ட்டி (Sarawak Progressive Democratic Party) கட்சியின் தேசியத் தலைவரும் பிந்துலு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியோங் கிங் சிங், நஸ்ரி ‘ஆணவமாகவும் நன்றிகெட்டத்தனமாகவும்’ நடந்து கொள்கிறார் என சாடியுள்ளார்.

தேசிய முன்னணியின் உணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் நேர் எதிரான முறையில் நஸ்ரி நடந்து கொள்கிறார் என்றும் தியோங் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சரவாக் மாநிலத்தில் இருந்தே இது போன்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்திருப்பது, தேசிய முன்னணியின் ஒற்றுமைத் தோற்றத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வாக்காளர்கள் மத்தியிலான ஆதரவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

குறிப்பாக ஏற்கனவே சீன வாக்காளர்களிடையே தேசிய முன்னணிக்கு ஆதரவு மங்கியிருக்கும் நிலையில், ரோபர்ட் குவோக் விவகாரத்தால் மேலும் ஆதரவு இழப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆளும் கட்சியில் இருக்கும் சீனப் பிரதிநிதிகளை நஸ்ரி மதிக்க வேண்டும். அம்னோவின் நெருக்கடியான காலகட்டங்களில் தேசிய முன்னணியிலுள்ள சீனக் கட்சிகள் அம்னோவுக்குத் துணை நின்றிருக்கின்றன. ஆனால், 2013 பொதுத் தேர்தலில் ஜசெக சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் வென்றன என்றும், அதனால் ஜசெகவும், லிம் குவான் எங்கும்தான் சீனர்களைப் பிரதிநிதிக்கும் தகுதி வாய்ந்தவர்கள் என்ற தொனியிலும் நஸ்ரி பேசியிருக்கிறார்” என்பதைச் சுட்டிக் காட்டிய தியோங்,

“ஆனால் தேசிய முன்னணியிலுள்ள சீனக் கட்சிகளை  சீன வாக்காளர்கள் நிராகரித்தது ஏன் என்பதை நஸ்ரி உணர்ந்திருக்கிறாரா?” என்றும் தியோங் நேற்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சீன வாக்காளர்கள் புறக்கணிப்பிற்கு அம்னோதான் காரணமா?

அம்னோவினால்தான் சீன வாக்காளர்கள் தேசிய முன்னணியிலுள்ள சீனக் கட்சிகளை புறக்கணித்திருக்கின்றனர் என்பதைத்தான் தியோங் மறைமுகமாகத் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல், ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தேசிய முன்னணியின் சீனக் கட்சிகளை நஸ்ரி கிண்டலடிக்கிறார். அம்னோவில் ஏற்பட்ட கடுமையான பிளவின்போது சீனக் கட்சிகள் அம்னோவின் பக்கம் இருந்ததை மறந்து விட்டார். இது நன்றியற்ற ஒருவரின் வழக்கமான செயல்” என்றும் தியோங் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

“நஸ்ரியின் வாதப்படி பார்க்கப் போனால், மலாய் வாக்காளர்களின் குறைந்த ஆதரவே கிடைத்து, கிளந்தானிலும், சிலாங்கூரிலும் தோல்வியடைந்திருப்பதால், அந்த மாநிலங்களிலுள்ள மலாய்க்காரர்களை அம்னோ பிரதிநிதிக்கவில்லை எனக் கூற முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள தியோங் தேசிய முன்னணிக்கு சரவாக் மாநிலத்திலுள்ள சீன வாக்காளர்கள் தந்திருக்கும் ஆதரவை நஸ்ரி மறந்து விட்டார் என்றும் 2016 சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வென்றதற்கு சீன வாக்காளர்களும் ஒரு காரணம் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.