பெல்டா சினி – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங்கில், நேற்று புதன்கிழமை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, பாலி தீவில் ஜோ லோவின் ஆடம்பரப் படகு முடக்கப்பட்ட சம்பவத்தை அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார்.
1எம்டிபியில் சுரண்டப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் ஜோ லோவின் ஆடம்பரப் படகை நேற்று அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் இந்தோனிசியாவில் பாலி தீவில் வைத்து முடக்கினர்.
இந்நிலையில் நேற்று இரவு பெல்டா சினியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மகாதீர், “அந்த ஆடம்பரப் படகு 1எம்டிபி நிதியில் இருந்து வாங்கப்பட்டது. அதனால் தான் இந்தோனிசிய அதிகாரிகள் துணிச்சலாக அதை முடக்கியிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
எனினும், பெல்டா சினி மக்களுக்கு இந்தத் தகவல் மிகவும் புதியது என்பதால் பலர், மகாதீர் எதைப் பற்றி பேசுகிறார் எனத் தெரியாமல் குழம்பியதாக தகவல்கள் கூறுகின்றன.