Home நாடு 2 தொகுதிகளில் போட்டியிடப் போகும் தேசிய முன்னணி பிரபலங்கள்!

2 தொகுதிகளில் போட்டியிடப் போகும் தேசிய முன்னணி பிரபலங்கள்!

1404
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகளை எதிர்நோக்கப் போகும் சில தொகுதிகளில் பிரபலமான வேட்பாளர்களை – குறிப்பாக மந்திரி பெசார் தகுதிக்குரிய வேட்பாளர்களை – சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு தொகுதிகளிலும் நிற்க வைப்பதன் மூலம், கூடுதல் தொகுதிகளில் வெற்றியடைய தேசிய முன்னணி வியூகம் வகுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது புதிய நடைமுறை அல்ல என்றாலும், கடந்த சில பொதுத் தேர்தல்களில் இத்தகைய நடைமுறையை தேசிய முன்னணி நிறுத்தி வைத்திருந்தது. காரணம், அதன் மூலம் கூடுதலான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற திட்டம்தான்.

முஸ்தாபா முகமட் – ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர்

ஆனால் வரவிருக்கும் தேர்தலோ வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட தேர்தலாக அமையப் போகிறது. எத்தனை தொகுதிகளைக் கூடுதலாக வெல்லலாம் என்பது மட்டுமே தேசிய முன்னணியின் இலக்காக இந்த முறை இருக்கப் போகிறது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, கடந்த 2013 பொதுத் தேர்தலில் கிளந்தானில் ஜெலி நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட், அதே தொகுதியின் கீழ்வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக ஆயர் லானாஸ் சட்டமன்றத்திலும் போட்டியிட்டு வென்றார்.

2013 பொதுத் தேர்தலில் கிளந்தான் மாநிலத்தை தேசிய முன்னணி கைப்பற்றியிருந்தால், முஸ்தாபா முகமட் அதன் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் அது நடக்கவில்லை.

எனினும், இந்த முறையும் முஸ்தாபா முகமட்டை நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரு தொகுதிகளிலும் நிறுத்தி, தேசிய முன்னணியின் கிளந்தான் மாநில மந்திரி பெசார் வேட்பாளராக பிரதமர் நஜிப் முன்னிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த முறை இத்தகைய ஒரு நடைமுறையை தனது தேர்தல் வியூகமாகவே தேசிய முன்னணி வகுக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராக், ஜோகூர் மந்திரி பெசார்கள் 2 தொகுதிகளில் போட்டியிடலாம்

சாம்ரி அப்துல் காதிர் – பங்கோர் சட்டமன்ற உறுப்பினர்

பேராக் மாநிலத்தின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாம்ரி காதிர் லுமுட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் பங்கோர் சட்டமன்றத்தில் போட்டியிட்டு 2013-இல் 5 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

ஆனால், லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் முகமட் இம்ரான் அப்துல் ஹாமிட் 8 ஆயிரம் வாக்குகளுக்கும் கூடுதலான பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

எனவே, இந்த முறை தேசிய முன்னணி லுமுட் தொகுதியைக் கைப்பற்ற வேண்டுமானால் லுமுட் நாடாளுமன்றத் தொகுதிக்கும் சாம்ரியையே நிறுத்த உத்தேசிக்கிறது.

ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின்

அதே போன்று, ஜோகூர் மாநில மந்திரி பெசார் காலிட் நோர்டின் பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் பெர்மாஸ் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு 2013-இல் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார்.

ஆனால் அதே சமயம் பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியை வெறும் 935 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அங்கு போட்டியிட்ட அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளர் நோர்மலா பிந்தி அப்துல் சமாட் வெல்ல முடிந்தது. இந்த முறை பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, காலிட் நோர்டின் பெர்மாஸ் சட்டமன்றத்திற்குப் போட்டியிடும் அதே வேளையில் பாசீர் கூடாங் நாடாளுமன்ற வேட்பாளராகவும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய வியூகத்தில் இன்னொரு சாதகம் என்னவென்றால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளர்கள் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தாலும், நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியடைந்தால் அதன் மூலம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெறச் செய்து கொள்ள முடியும்.

2 தொகுதிகளில் போட்டி – எதிர்க்கட்சிகளும் பின்பற்றும் நடைமுறை

wan aziza
வான் அசிசா – சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்

இந்த நடைமுறை சபா, சரவாக் மாநிலங்களிலும், எதிர்க்கட்சிகளிலும் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது.

உதாரணமாக, பிபிஎஸ் கட்சித் தலைவர் ஜோசப் பைரின் கித்திங்கான் சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டிலும் எப்போதும் போட்டியிடுவார்.

பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசாவும் காஜாங் சட்டமன்ற உறுப்பினராகவும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

அஸ்மின் அலி

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதனை அடுத்திருக்கும் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

லிம் குவான் எங் பாகான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், புக்கிட் பெண்டரா தொகுதியின் கீழ்வரும் ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

2008-இல் பேராசிரியர் இராமசாமி பிறை சட்டமன்றத்திலும், பத்து கவான் நாடாளுமன்றத்திற்கும் போட்டியிட்டு வென்றார்.

எனினும், ஜசெகவில் 2013 முதல் ஒரு நபருக்கு ஒரு தொகுதி என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இராமசாமி 2013-இல் பிறை சட்டமன்றத்தில் மட்டுமே போட்டியிட்டு வென்றார்.

லிம் குவான் போன்ற முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே ஜசெகவில் இந்தக் கோட்பாட்டிலிருந்து விதிவிலக்கு.

ஆனால், இந்த முறை தேசிய முன்னணி, கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளை வெற்றிகொள்ளும் தனது இலக்கின் வியூகமாக சில வேட்பாளர்களை சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒருசேர நிறுத்தும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்