Home நாடு தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (12) – பாசீர் கூடாங்: ஆலய உடைப்பு எதிர்ப்பு வாக்குகளாக...

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (12) – பாசீர் கூடாங்: ஆலய உடைப்பு எதிர்ப்பு வாக்குகளாக மாறுமா?

1473
0
SHARE
Ad
Normala_Abdul_Samad-pasir gudang MP
நோர்மலா பிந்தி அப்துல் சமாட் – ஜோகூர் பாசீர் கூடாங் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்

(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் –போன்ற காரணங்களால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஜோகூர் மாநிலத்தின் துறைமுகத் தொகுதி பாசீர் கூடாங்!

2013-ஆம் ஆண்டின் கணக்குப்படி 101,041 வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதி. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் நோர்மலா பிந்தி அப்துல் சமாட் 43,834 வாக்குகள் பெற்றாலும்,  935 வாக்குகள் வித்தியாசத்தில்தான் இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

#TamilSchoolmychoice

அவரை எதிர்த்து நின்று நெருங்கி வந்தவர் பிகேஆர் கட்சியின் வேட்பாளர். இந்த முறையும் பிகேஆர் கட்சிக்கே பாசீர் கூடாங் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மலாய் வாக்காளர்கள் 47 விழுக்காடும், சீன வாக்காளர்கள் 38 விழுக்காடும், இந்தியர்கள் 11 விழுக்காடும் கொண்ட தொகுதி பாசீர் கூடாங்.

pasir gudang-parliament-2013-results
2013 பொதுத் தேர்தலில் பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியின் முடிவுகள்

தேசிய முன்னணிக்கு எதிரான இரண்டு பிரச்சனைகள்

Muhyiddin-Yassin-PPBM
டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

இந்த முறை இரண்டு பெரிய பிரச்சனைகள் இந்தத் தொகுதியில் ஊடுருவியுள்ளன. தேசிய முன்னணியின் வாக்கு வங்கியைப் பெருமளவில் அந்தப் பிரச்சனைகள் பாதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பிரச்சனை, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது அனுதாபம் கொண்ட ஆதரவாளர்கள் அம்னோவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பது!

நாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் குறிப்பிட்டபடி மொகிதின் யாசினின் செல்வாக்கும், அவரும் மகாதீரும் இணைந்த பெர்சாத்து கட்சியின் ஊடுருவலும் ஜோகூர் மாநிலத்தில் கணிசமான வாக்குகளை தேசிய முன்னணிக்கு எதிராகத் திருப்பும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.

ஸ்ரீ சின்னகருப்பர் ஆலய உடைப்பு – வாக்குகளைப் பாதிக்குமா?

masai-temple-broken-11012018
உடைக்கப்பட்ட நிலையில் ஸ்ரீ சின்னகருப்பர் ஆலய தெய்வச் சிலைகள்

இரண்டாவது பிரச்சனை புதிதாக முளைத்த ஒன்று!

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி இந்தத் தொகுதியில் உள்ள மாசாய் ஸ்ரீ சின்னகருப்பர் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம். இந்த ஆலயம் உடைக்கப்பட்ட விதம் – இந்து கடவுள்களின் சிலைகள் உடைக்கப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டிருந்த அவலம் – சுமார் 300 காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆலயம் உடைக்கப்படுவதற்கு உதவியாக அரணாக நின்றனர் என்ற குற்றச்சாட்டு – இவை எல்லாம் சேர்ந்து மலேசியா முழுமையிலும் இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளும் இந்தக் கொந்தளிப்பை தகுந்த விதமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஆலய உடைப்பால் இந்திய வாக்காளர்கள் எதிர்த்து வாக்களிப்பார்களா?

ஆலய உடைப்பு பாசீர் கூடாங் தொகுதியில் தேசிய முன்னணிக்கு எதிராக இந்திய வாக்குகளை திருப்பும் என்று சொல்லப்படுவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், இங்கே இருக்கும் 11 சதவீத இந்திய வாக்காளர்கள்.

johor-sultan-donation-masai-temple-20012018 (4)
ஸ்ரீ சின்னகருப்பர் ஆலய பொறுப்பாளர்களுடன் ஜோகூர் சுல்தான் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தியபோது

2013 புள்ளிவிவரப்படி 11 சதவீதம்தான் என்றாலும், இப்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடியிருக்கலாம். எனவே, இன்றைய நிலையில் இந்திய வாக்காளர்களிடையே ஆலய உடைப்பு காரணமாக தேசிய முன்னணிக்கு எதிரான மனநிலையே நிலவுகிறது. இதைப் பொதுத் தேர்தலுக்குள் தேசிய முன்னணி எவ்வாறு மாற்றப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

ஆலயத்திற்கு உடனடியாக மாற்று நிலம் வழங்கப்பட்டிருக்கிறது. அவசரம் அவசரமாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் விளக்க அறிக்கை கொடுத்தார். மஇகா மாநிலத் தலைவர் அசோஜனும் மஇகா சார்பிலான விளக்கத்தை வழங்கியிருக்கிறார்.

subra-chinna-karupar-visit -210118-
கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மாசாய் ஸ்ரீ சின்னகருப்பர் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட மாற்று நிலத்தை டாக்டர் சுப்ரா நேரடியாகப் பார்வையிட்டபோது… அவருக்கும் விளக்கம் தருகிறார் அசோஜன். அருகில் ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வித்தியானந்தன்.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியமும் உடைக்கப்பட்ட சின்னகருப்பர் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட மாற்று நிலத்தை கடந்த ஜனவரி 21-ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜோகூர் மாநில சுல்தானே நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்புகளை தனது அரண்மனைக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தனது சார்பில் 1 இலட்சம் ரிங்கிட்டும் தனது புதல்வர் சார்பில் 70 ஆயிரம் ரிங்கிட்டும் ஆலய மறுநிர்மாணிப்புக்காக வழங்கியிருக்கிறார்.

மந்திரி பெசாரின் சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதி

Khaled Nordin
ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின்

பாசீர் கூடாங் தொகுதியில் மற்றொரு சுவாரசியமும் அடங்கியிருக்கிறது. இந்தத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஜோகூர் ஜெயா மற்றும் பெர்மாஸ் ஆகும்.

ஜோகூர் ஜெயா தொகுதியை கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக வென்றது.

பெர்மாஸ் சட்டமன்றம் நடப்பு ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் 2013-இல் 5,752 வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற தொகுதியாகும். ஆனாலும் இந்திய வாக்காளர்களை 15 விழுக்காடு கொண்ட தொகுதியாகும் பெர்மாஸ். மலாய் வாக்காளர்கள் 52 விழுக்காடும், சீன வாக்காளர்கள் 29 விழுக்காடும் இங்கே இருக்கின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் பெர்மாஸ் தொகுதியில் பாஸ் கட்சி காலிட் நோர்டினை எதிர்த்துப் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை பிகேஆர் அல்லது பெர்சாத்து கட்சி போட்டியிட்டால் அதனால் மலாய் வாக்குகள் சிதறும். ஆலய உடைப்பு விவகாரத்தால் கணிசமான இந்திய வாக்குகளும் தேசிய முன்னணிக்கு எதிராக விழக்கூடும்.

Pasir Gudang-P159
பாசீர் கூடாங் தொகுதியின் வாக்காளர் விழுக்காட்டைக் காட்டும் வரைபடம்

இதனால், சின்னகருப்பர் ஆலய உடைப்பு விவகாரத்தால் பாசீர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்ல – ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் போட்டியிடப் போகும் பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதியும் ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது.

சின்னகருப்பர் ஆலய உடைப்பு விவகாரத்தில் ஜோகூர் மந்திரி பெசாரின் விளக்கம் – மஇகாவின் முயற்சிகள் – ஜோகூர் சுல்தானின் தீர்வு காண முற்படும் தலையீடு – இவையனைத்தும் ஒன்று சேர்ந்து இங்குள்ள இந்திய வாக்காளர்களைச் அமைதிப்படுத்துமா?

அல்லது தேசிய முன்னணிக்கு எதிராக திரண்டெழச் செய்யுமா?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் எனக் கருதப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்று பாசீர் கூடாங்!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)

தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (10) – ஜோசப் குருப் தடுமாறப் போகும் பென்சியாங்கான்!

தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?