சென்னை – கடந்த திங்கட்கிழமை ஜனவரி 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் கண்டனங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை காட்டிய விஜயேந்திரர் பின்னர் தமிழ் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
தமிழ் வாழ்த்து பாடப்பட்டபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நிற்க இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சிகளை தமிழக ஊடகங்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் நேற்று முழுவதும் திரும்பக் திரும்பக் காட்டியதைத் தொடர்ந்து, பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழராக இருந்தும் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக முக்கியத் தலைவர்களும் பிரமுகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் இதுகுறித்து விளக்கம் அளித்த காஞ்சி சங்கர மடம் தமிழ் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்றும் அதனால்தான் எழுந்து நிற்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.