Home நாடு ‘முதல்வர் குற்றமற்றவர் என நிரூபிக்க புகார் அளித்தேன்’ – லிம் பங்களா வழக்கில் சாட்சி தகவல்!

‘முதல்வர் குற்றமற்றவர் என நிரூபிக்க புகார் அளித்தேன்’ – லிம் பங்களா வழக்கில் சாட்சி தகவல்!

832
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கு பெண் வணிகர் பாங் லி கூன் என்பவரிடமிருந்து சந்தை விலையிலிருந்து குறைந்த தொகைக்கு பங்களா ஒன்றை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வாங்கினார் என்ற ஊழல் குற்றச்சாட்டு மீதான வழக்கு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

லிம் வாங்கிய பங்களா குறித்து முதன் முதலாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் புகார் அளித்த நபரான முஷின் அப்துல் லத்தீப் என்பவர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டார்.

அப்போது முஷின் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தாசிக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ ஷாபுடின் யஹாயா, பங்களா குறித்துக் கேள்வி எழுப்பினார். அதனை செய்திகளில் பார்த்து, நான் கடந்த 2016, மார்ச் 18-ம் தேதி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் புகார் அளித்தேன் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பின்னர், துணை அரசாங்க வழக்கறிஞர், முஷினிடம், “யாராவது உங்களைப் புகார் அளிக்கத் தூண்டினார்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முஷின், “இல்லை” என்றார்.

“நான் எனது சுய விருப்பத்தில் தான் புகார் அளித்தேன். அதன் மூலம் முதல்வர் தான் குற்றமற்றவர் என நிரூபித்துக் கொள்ள முடியும் என்று எண்ணினேன்” என்றும் முஷின் தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது, நாடாளுமன்றத்தில், பங்களா குறித்து டத்தோ ஷாபுடின் யஹாயா கேள்வி எழுப்பும் காணொளி நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, லிம் குவான் எங் தரப்பு வழக்கறிஞரான கோபிந்த் சிங் டியோ, முஷினை குறுக்கு விசாரணை செய்தார்.

முஷின் ஒரு பாரிசான் ஆதரவாளர் என்று கோபிந்த் கூற, அதனை முஷின் மறுத்தார்.
மேலும், ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் முஷின் அளித்த புகாரில் உண்மையில்லை என்றும், 2008-ம் ஆண்டு அப்படி ஒரு பங்களா வாங்கப்படவே இல்லை என்றும் கோபிந்த் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த முஷின், “எனக்குத் தெரியாது” என்றார்.
“நீங்கள் தான் புகார் அளித்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாது என்கிறீர்கள். இது போல் போலியாகத் தகவல் கொடுப்பது குற்றம் தெரியுமா?” என்று கோபிந்த் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முஷின், “ஆம். தெரியும்” என்றார்.

“பங்களா சந்தை விலைக்குக் குறைவாக வாங்கப்படவில்லை. முறையான விலையில் தான் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று லிம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முஷின், “ஒப்புக் கொள்ளவில்லை” என்று பதிலளித்தார்.
இவ்வழக்கு விசாரணையில், நேற்று முஷினோடு சேர்த்து 7 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் மாநில நிர்வாகத்திலிருந்தும், ஒருவர் தேசியப் பதிவகத்திலிருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.