Home வணிகம்/தொழில் நுட்பம் தேர்தல்’14 – தமிழ் நாளிதழ்களின் விளம்பர வருமானம் அதிகரிக்கும்

தேர்தல்’14 – தமிழ் நாளிதழ்களின் விளம்பர வருமானம் அதிகரிக்கும்

1916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மைய சில ஆண்டுகளாக தங்களின் விற்பனை குறைந்து வருகிறது – வாசகர்களின் வாங்கிப் படிக்கும் ஆர்வம் சரிந்து வருகிறது – விளம்பர வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது – என அச்சு ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து குறைபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்திருக்கிறது மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல்.

மலேசியாவின் அனைத்து மொழி ஊடகங்களுக்கும் இது பொருந்தும். அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் நான்கு முக்கிய தமிழ் நாளிதழ்களும் கூட இந்த கூடுதல் பொதுத் தேர்தல் விளம்பரங்களால் பயனடையும், அவற்றின் விளம்பர வருமானமும் அடுத்த ஒரு மாதத்தில் கணிசமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர் ஆகிய நான்கு தமிழ் நாளிதழ்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘தாய்மொழி’ நாளிதழ் பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் விளம்பரங்களால் ஆதாயம்

#TamilSchoolmychoice

அரசியல் கட்சிகளின் நேரடி விளம்பரங்கள் ஒருபுறமிருக்க, பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களின் நேரடி விளம்பரங்களும் பத்திரிக்கைகளில் இடம் பெறத் தொடங்கும்.

ஸ்டார் ஆங்கில நாளிதழில் வெளிவந்த இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சின் விளம்பரம்

இவை தவிர, தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுகளும், இலாகாக்களும், அரசு சார்பு நிறுவனங்களும் கூட தங்களின் பொதுமக்கள் தொடர்பான சாதனைகளை விளக்கி விளம்பரங்களை பொதுத் தேர்தல் சமயத்தில் வெளியிடத் தொடங்கும்.

பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் வேளையில் மறைமுகமான அரசாங்க விளம்பரங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்களில் இப்போதே இடம் பெறத் தொடங்கிவிட்டன.

ஒவ்வொரு அமைச்சரும், அமைச்சு குறித்த சாதனைகளை விளக்கும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள் ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து இப்போதே இடம் பெற்று வருகின்றன.

பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் மேலும் அதிகமான கட்சி விளம்பரங்கள் இடம் பெறத் தொடங்கும். குறிப்பாக தேசிய முன்னணியின் மிகப் பெரிய அளவிலான விளம்பரங்கள் எப்போதும் பொதுத் தேர்தல் தருணத்தில் நாளிதழ்களை அலங்கரிக்கத் தொடங்கும்.

தேர்தல் கொள்கை அறிக்கைகளும் அனைத்து மொழி நாளிதழ்களிலும் வெளியிடப்படுவதும் ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் வழக்கம்.

எதிர்க்கட்சிகளுக்கு சரிசம விளம்பர வாய்ப்பு வழங்கப்படுமா?

எதிர்க்கட்சிகளும் தங்களின் விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிடும் என்றாலும், நாளிதழ்களில் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வளவாக விளம்பர வாய்ப்புகள் தரப்படுவதில்லை. தேசிய முன்னணி அரசாங்கத்தின் பார்வையில் – உள்துறை அமைச்சின் அனுமதிச் சான்றிதழின் மூலமே இயங்கிக் கொண்டிருப்பதால் – நாளிதழ்கள் எப்போதுமே எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரங்களில் முன்னுரிமையோ, சரிசம வாய்ப்போ அளிப்பதில்லை.

இதன் காரணமாக, இந்த முறை எதிர்க்கட்சிகள் இணைய ஊடகங்களை தங்களின் விளம்பரங்களுக்காக நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் இணைய ஊடகங்கள், அதிகமான எதிர்க்கட்சி செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

எனவே, இந்த இணைய ஊடகங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைய ஊடகங்களுக்கு தங்களின் விளம்பரங்களை பொதுத் தேர்தல் சமயத்தில் அதிக அளவில் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, இணைய ஊடகங்களும் விளம்பர வருவாய் அதிகரிப்பின் மூலம் பயனடையும்.

தேசிய முன்னணியும், அதன் உறுப்பியக் கட்சிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணைய ஊடகங்களுக்கு தங்களின் விளம்பரங்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வளவுதான் விளம்பரங்கள், செய்திகள் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டாலும், பொதுத் தேர்தல் விவாதங்களையும், பிரச்சார விவகாரங்களையும் மக்களிடையே முன்னெடுத்துச் செல்வதில் இணைய ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கும்.

இந்த நவீன சமூக ஊடக யுகத்தில் – செல்பேசிகளின் ஆதிக்கத்தில் இயங்கும் வாக்காளர்களின் – குறிப்பாக இளைய தலைமுறையினரின் – மன மாற்றங்களுக்கு இணைய ஊடகச் செய்திகளே முக்கிய கருவிகளாகத் திகழும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

-இரா.முத்தரசன்