Home நாடு பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்போம் – ஜமால் முகமட் எச்சரிக்கை

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்போம் – ஜமால் முகமட் எச்சரிக்கை

955
0
SHARE
Ad
டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, அதனை எதிர்த்து பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் தலைமையிலான சிவப்பு சட்டை அணியினர் எனக் கூறிக் கொள்ளும் பிரிவினர் தாங்களும் நாடாளுமன்றத்தின் முன் கூடி மஞ்சள் சட்டை அணிந்த பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகப் போராடுவோம் என அறிவித்திருக்கின்றனர்.

“பெர்சே அமைப்பினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்றத்தின் முன் நாளை புதன்கிழமை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களை நாங்கள் திரட்டுவோம்” என ஜமால் முகமட் சூளுரைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மஞ்சள் சட்டையினர் கூடப் போவதில்லை என்றால், சிவப்பு சட்டை அணியினரான நாங்களும் வர மாட்டோம் என ஜமால் கூறியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை அம்பாங்கில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜமால் முகமட் இந்த விவரங்களை வெளியிட்டார்.

“நாங்கள் நாடாளுமன்றத்தின் அருகில் இருந்து கண்காணிக்கப் போகிறோம். மஞ்சள் சட்டை பெர்சே அணியினர் திரண்டால் நாங்களும் அங்கே வந்து கூடுவோம். நேருக்கு நேர் எதிர்ப்புத் தெரிவிப்போம்” என்றும் ஜமால் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே போதுமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் வேண்டுமானால் தொகுதி எல்லைகள் சீர்திருத்தங்கள் மீதான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம், மாறாக பெர்சே ஆர்ப்பாட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் ஜமால் கூறினார்.

பெர்சே அமைப்புக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்யப் போவதாக ஜமால் தெரிவித்திருக்கிறார்.

தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் மசோதா

தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என பெர்சே ஏற்கனவே நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தொகுதி எல்லை மாற்றங்கள் குறித்த பல வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணையில் பல்வேறை கட்டங்களில் இருப்பதால், அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும் விவாதிப்பதும் நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பாகும் எனவும் பெர்சே எச்சரித்திருக்கிறது.

நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தின் முன் கூடி தொகுதிகள் எல்லை சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, பெர்சே உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நாடாளுமன்ற அவைத் தலைவர் பண்டிகாரிடம் வழங்குவர் என்றும் பெர்சே அறிவித்திருக்கிறது.

வாக்காளர்கள் இந்த தொகுதி எல்லை மாற்றங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்குத் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட பெர்சே, இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

பெர்சே ஏன் போராடுகிறது?

வெளிப்படைத் தன்மையின்றி, நடைமுறைகளை மீறி தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துள்ள இந்த மசோதாவை எதிர்க்க எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் முன் திரள வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை (25 மார்ச் 2018) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பெர்சே அமைப்பின் இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமட் சாரி அறைகூவல் விடுத்திருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்படக் கூடாது என்றும் மலேசிய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டபடி, பொதுமக்களின் ஆட்சேபங்களையும் தேர்தல் ஆணையம் இன்னும் செவிமெடுக்கவில்லை என்றும் ஷாருல் குற்றம் சாட்டினார்.

அதே வேளையில், இன்னொரு கோணத்தில், சபா மாநிலத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மாற்றங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சபா சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரும் இதுவரையில் அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் பெர்சே சுட்டிக் காட்டியுள்ளது.

சபா எல்லை திருத்தங்களை இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல், மேற்கு மலேசியாவுக்கான தொகுதி எல்லை மாற்றங்களை மட்டும் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கிறது.

சபா மாநில தொகுதி எல்லை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதி எல்லை மாற்றங்களால் ஷாபி அப்டாலுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால்தான் சபா தொகுதி எல்லை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.