Home நாடு லெம்பா பந்தாயில் போட்டியிடத் தகுதியானவரை அறிவித்தார் நூருல் இசா!

லெம்பா பந்தாயில் போட்டியிடத் தகுதியானவரை அறிவித்தார் நூருல் இசா!

1025
0
SHARE
Ad

கோலாலம்பூர் – லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா, 14-வது பொதுத்தேர்தலில் தனது தொகுதியைத் தக்க வைக்கப் போவதில்லை என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன.

அது குறித்து மௌனம் காத்து வந்த நூருல் இசா, நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தான் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தனக்குப் பதிலாக அத்தொகுதியில் போட்டியிடுவதற்கு சரியான வேட்பாளர் யார் என்பதையும் அவர் தேர்வு செய்திருக்கிறார்.

ஃபாஹ்மி ஃபாட்சில்
#TamilSchoolmychoice

கடந்த 10 வருடங்களாக தனது செயலாளராக இருந்து வரும் பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்சில் தான் அத்தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியானவர் என நேற்று வியாழக்கிழமை இரவு எஸ்ஜேஏ (சி) சங் குவோவில் நடைபெற்ற லெம்பா பந்தாய் பக்காத்தான் ஹராப்பான் நிதி திரட்டும் நிகழ்ச்சியின் போது நூருல் இசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“அவருக்கு மக்களைத் தெரியும். மக்களுக்கு அவரைத் தெரியும். மக்கள் தொகை பற்றி தெரியும். என்னுடன் களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார்” என்று நூருல் இசா தெரிவித்தார்.

மேலும், லெம்பா பந்தாயில் போட்டியிடுவதற்குத் தகுதியானவர்களாக பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தேர்ந்தெடுத்திருக்கும் 3 பேரில் ஃபாஹ்மியும் ஒருவர் என்றும் நூருல் இசா குறிப்பிட்டார்.

என்றாலும், அந்த மற்ற இருவர் யார் என்பதை நூருல் இசா தெரிவிக்கவில்லை.

“அத்தொகுதியில் போட்டியிடத் தகுதியான வேட்பாளரிடம் சில தகுதிகளை தலைமைத்துவம் எதிர்பார்க்கிறது. கல்விப் பின்புலம், தகவல் தொடர்பு தகுதி, ஈடுபாடு மற்றும் இன்னும் பல. ஃபாஹ்மி அவற்றிற்கெல்லாம் தகுதி வாய்ந்தவராக இருக்கிறார்.

“தொகுதியின் தேர்வாகவும் அவர் தான் இருக்கிறார். லெம்பா பந்தாயைப் பொறுத்தவரையில், எனக்கு அடுத்து ஃபாஹ்மி தான்” என்று நூருல் இசா தெரிவித்தார்.