Home நாடு “ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா?” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி

“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா?” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி

1535
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தாலும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை துணிச்சலுடன்  வலியுறுத்தி வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் ஜோ லோவை உதாரணம் காட்டி துன் மகாதீருக்கு சில கேள்விகள் எழுப்பியுள்ளார்.

“சாகிர் நாயக்கை நாடு கடத்துவதில் காட்டப்படும் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணியாது” என்ற தொனியில் மகாதீர் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு எதிராக இராமசாமி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?” என மகாதீரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள இராமசாமி “அவ்வாறு ஜோ லோ இந்தியாவில் இருந்தால் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தை இந்தியா மதிக்க வேண்டும் என்றுதானே மலேசியாவும் எதிர்பார்க்கும்?” என கேள்விக் கணை தொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தற்போது மக்காவ் தீவில் இருப்பதாக நம்பப்படும் ஜோ லோ வேறொரு நாட்டின் அனைத்துலகக் கடப்பிதழைப் பயன்படுத்தி அங்கு தஞ்சம் அடைந்திருக்கின்றார் என நம்பப்படுகிறது. இந்நிலையில் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அவரை மீண்டும் மலேசியா கொண்டு வந்து விசாரிக்க மலேசியக் காவல் துறை தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

“ஜமால் முகமட் யூனுசை எப்படிக் கொண்டு வந்தீர்கள்?”

அண்மையில் இந்தோனிசிய காவல் துறையினர் மலேசியாவிலிருந்து தப்பிச் சென்ற சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யூனுசை கைது செய்து மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பிய சம்பவத்தையும் இராமசாமி உதாரணமாகக் காட்டியுள்ளார்.

“நாட்டின் சட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். பிரதமர் தனது கருத்துகளைக் கூறலாம். ஆனால், சாகிர் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்யட்டும்” எனவும் இராமசாமி வலியுறுத்தினார்.

இராமசாமி மலேசியா கினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

“சாகிர் நாயக்கை நாம் மீண்டும் சிறைக்கு அனுப்பப் போவதில்லை. மாறாக, நீதிமன்ற வழக்கைச் சந்திக்கத்தான் இந்தியாவுக்கு அனுப்பவிருக்கிறோம். பிரதமருக்கு யாரும் நெருக்குதல் தரவில்லை. ஆனால் சாகிர் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையானக் குற்றச்சாட்டுகளை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். 2016-இல் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலிலும் சாகிர் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இந்திய நீதிமன்றங்கள் வலிமை வாய்ந்தவை. சாகிருக்கு நியாயமான நீதியை அவர்கள் வழங்குவார்கள்” என்றும் இராமசாமி கூறியிருக்கிறார்.