இதுகுறித்து நடப்பு பிகேஆர் தலைவரும் தனது துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசாவிடமும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியிடமும் தான் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
கட்சியின் தலைமைத்துவம் சிறப்பான முறையில் தொடரப்பட வேண்டும் என்ற நோக்கில், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் எண்ண ஓட்டங்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், எதிர்வரும் நவம்பர் 2018-இல் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் கட்சித் தேர்தல்களுக்குப் பின்னர் பிகேஆர் கட்சியைத் தலைமையேற்று வழிநடத்துவேன் என்றும் அன்வார் தனது முகநூல், டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் பிகேஆர் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி தனக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டாலும், சங்கப் பதிவிலாகா விதித்திருந்த கட்டுப்பாடுகள், சட்டங்கள், தன்மீதிருந்த தண்டனைகள் ஆகியவை காரணமாகத் தன்னால் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாத நிலைமை இருந்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
1999-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பிகேஆர் கட்சியின் தலைமைப் பொறுப்பை இதுநாள் வரை வான் அசிசா ஏற்று நடத்தி வந்தார். பல்வேறு சவால்கள், போராட்டங்களைத் தாங்கி – தாண்டி – பிகேஆர் கட்சியை நடத்தி வந்த வான் அசிசா மற்றும் அந்தக் கட்சியின் சோர்வடையாத தொண்டர்கள், ஆதரவாளர்களின் உழைப்பு காரணமாக, மே 9 பொதுத் தேர்தலில் மத்திய அரசாங்கத்தை அமைக்கும் வண்ணம் அந்தக் கட்சி துன் மகாதீருடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.