கூச்சிங் – சரவாக் மாநிலத்திற்கு 2 நாள் வருகை தந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் நியமிக்கப்படுவார் என அறிவித்தார்.
நாளை திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் 14-வது பொது தேர்தலுக்குப் பிந்திய முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது.
முகமட் அரிப் ஓய்வு பெற்ற முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாவார். பொதுமக்கள் மத்தியில் இந்த நியமனம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல், கட்சி சார்பின்றி முன்னாள் நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலம் நாடாளுமன்ற விவாதங்கள் இனி நடுநிலையோடும், ஆரோக்கியமான முறையிலும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
முகமது அரிப் பின்னணி என்ன?
கல்வியை முடித்தவுடன் ஒரு சட்டத்துறை விரிவுரையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய முகமட் அரிப் பின்னர் 1974 முதல் 1985 வரை மலாயாப் பல்கலைக் கழக சட்டத் துறையில் விரிவுரையாளராகவும் இணைப் பேராசிரியராகவும், சட்டத் துறையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
1986 முதல் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த முகமது அரிப் ‘சியாங் & அரிப்” என்ற வழக்கறிஞர் நிறுவனத்தை இணைந்து தோற்றுவித்து நடத்தி வந்தார். 2008-இல் உயர்நீதிமன்ற நீதி ஆணையராக (Judicial Commissioner) நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-இல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2015-இல் நீதிபதியாக ஓய்வு பெற்ற முகமது அரிப் தற்போது தான் முன்பு தோற்றுவித்த அதே “சியாங் & அரிப்” வழக்கறிஞர் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.