புதுடில்லி – நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் நிர்மலா அவரைப் பார்க்க முடியாது எனத் தவிர்த்து விட்டதாகவும் தமிழக ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
ஆனால் அதே சமயம் அந்தத் தருணத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற மேலவை (இராஜ்ய சபா) உறுப்பினர் மைத்ரேயனை நிர்மலா சீதாராமன் சந்தித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பாஜக – அதிமுக இடையில் உறவுகள் கசந்துள்ளதாக ஒரு தரப்பும், முன்கூட்டியே அனுமதி கேட்காததால்தான் பன்னீர் செல்வத்தைச் சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்து விட்டார் என இன்னொரு தரப்பும் தெரிவித்திருக்கின்றன.
தனது சகோதரரின் சிகிச்சைக்காக இராணுவ ஹெலிகாப்டரைக் கொடுத்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்றதாக பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், நிர்மலா சீதாராமன் தன்னைப் பார்க்காமல் தவிர்த்தது குறித்துப் பத்திரிக்கையாளர்களிடம் கருத்துரைத்த பன்னீர் செல்வம் “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.