Home நாடு “அன்று இராமசாமியை ஒன்றும் கேட்காத ஜசெக இன்று மட்டும் கேள்வி எழுப்புவதேன்?” சுவாமி இராமாஜி கேள்வி

“அன்று இராமசாமியை ஒன்றும் கேட்காத ஜசெக இன்று மட்டும் கேள்வி எழுப்புவதேன்?” சுவாமி இராமாஜி கேள்வி

2097
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “வைகோ – விடுதலைப் புலிகள் விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் நிலைப்பாடு எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. பல முறை வைகோவை மலேசியாவுக்கு வரவழைத்து இராமசாமி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். தமிழ் நாட்டிலும் வைகோவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை மக்களின் நலன்களுக்காக பல முறை குரல் கொடுத்துள்ளார். அப்போதும் பினாங்கு மாநில துணை முதல்வராக ஜசெக சார்பில் பதவி வகித்தார். ஆனால் அப்போதெல்லாம் ஒன்றும் பேசாமல், அமைதி காத்த ஜசெக இன்று மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தவுடன் அவரை விளக்கம் கேட்க அழைத்திருப்பது நியாயமற்ற ஒன்று. அதுமட்டுமல்லாமல் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சரைச் சந்தித்து இராமசாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என சுவாமி இராமாஜி கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சம்பந்தமாக, செல்லியல் ஊடகத்திடம் தொடர்பு கொண்டு பேசிய சுவாமி இராமாஜி, நமக்கு நான்கு அமைச்சர்கள் இருந்தும் ஒருவர் கூட இராமசாமியைத் தற்காக்க முன்வராதது வேதனையளிக்கிறது என்றும் தெரிவித்தார். “சாகிர் நாயக் பற்றி கேள்வி எழுப்புவதால்தான் இராமசாமிக்கு எதிராக காவல் துறை புகார்களும், எதிர்ப்புகளும் எழுகின்றன என்பதைக் கூடவா இன்னும் நம்மவர்கள் புரிந்து கொள்ளவில்லை?” என்றும் இராமாஜி கேள்வி எழுப்பினார்.

இந்து சமயம், இந்திய சமுதாயம் தொடர்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர் சுவாமி இராமாஜி.

#TamilSchoolmychoice

“இராமசாமி நமது தமிழ் இன நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ள இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் அரசியல், இன வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும்” என்றும் இராமாஜி கேட்டுக் கொண்டார்.

“இந்த விவகாரத்தில் சில தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. வைகோவுடன் இராமசாமி ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டதற்காக காவல் துறையில் புகார்கள்கள் செய்கின்றனர். ஆனால் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே பல முறை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் யாரும் எதனையும் கூறவில்லை. மேலும் வைகோ தமிழ் நாட்டுக்காரர். ஒரு தமிழக அரசியல் கட்சியின் தலைவர். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ஈடுபட்டு வருபவர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். அவர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை மக்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பவர் என்ற ஒரே அம்சத்தை வைத்து வைகோவையும், இராமசாமியையும் விடுதலைப் புலிகளோடு இணைத்து புகார்கள் செய்வதும், அதற்காக ஜசெக அவரிடம் விளக்கம் கேட்பதும் நியாயமில்லை” என்றும் இராமாஜி வலியுறுத்தினார்.

அன்று தொட்டதெற்கெல்லாம் மஇகா ஏன் கேள்வி கேட்கவில்லை – அதன் அமைச்சர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் – என்று அறைகூவல் விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக வீற்றிருந்தாலும், அவர்களும் அதே போல மௌனம் காத்து வருவது வேதனையளிக்கிறது. இந்த சூழலில்தான் எப்போதுமே தனது கொள்கையில் ஒரே நிலையாக இருந்து வரும் இராமசாமி, துணை முதல்வராகப் பதவி வகித்தாலும், பல விவகாரங்களில் குறிப்பாக சாகிர் நாயக் விவகாரத்தில் துணிந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே அவரை இந்திய சமுதாயத்தினர் தற்காக்க வேண்டியது அவசியமாகும்” என்றும் இராமாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.