Home நாடு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் மகாதீர் – அன்வார்

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் மகாதீர் – அன்வார்

1643
0
SHARE
Ad
தேசிய தின அணிவகுப்பு மேடையில் மகாதீருடன் கைகுலுக்கும் அன்வார்

புத்ரா ஜெயா – 1998-ஆம் ஆண்டு தேசிய தினம் பினாங்கு மாநிலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த துன் மகாதீரும், துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தேசிய தின அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.

அதன்பிறகு அடுத்து வந்த 20 ஆண்டுகள், அரசியலில் இருவரையும் இரு துருவங்களாகப் பிரித்து வைத்ததும், பின்னர் 2018 பொதுத் தேர்தலை முன்னிட்டு இருவரும் இணைந்து கரம் கோர்த்ததும், நாடறிந்ததுதான்.

மகாதீர் – அன்வார் இருவரும் பல சமயங்களில் சந்தித்துக் கொண்டாலும், கூட்டங்களில் கலந்து கொண்டாலும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ஒன்றாக இணைந்து காட்சி தந்தாலும், அதிகாரபூர்வ நிகழ்ச்சி எதிலும் இதுவரை அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கலந்து கொண்டதில்லை.

#TamilSchoolmychoice

20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நடத்தப்பட்ட தேசிய தின அணிவகுப்பு ஒரே மேடையில் மீண்டும் மகாதீரையும், அன்வாரையும் இணைத்திருக்கிறது.

பிரதமர் என்ற முறையில் மகாதீர், மாமன்னர் மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருக்க, அதே மேடையில் துணைப் பிரதமர் என்ற முறையில் வான் அசிசாவுக்கும், அவரது கணவர் என்ற முறையில் அன்வாருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அவர்களும் அங்கு அமர்ந்து தேசிய தின அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.

அணிவகுப்புக்கு முன்னதாக அன்வாரும் மகாதீரை நோக்கிச் சென்று கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். ஒரே மேடையில் மீண்டும் மகாதீரும், அன்வாரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை அன்வாரின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.