ஈப்போ – ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 மாதங்களில் தனது பல்வேறு அதிகாரபூர்வ பணிகளுக்கு இடையில், பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளில், 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிட்டிருப்பதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்கும் மாநிலத்திலுள்ள அனைத்து 134 தமிழ்ப்பள்ளிகளுக்கும் வருகை தந்து நிலைமைகளைக் கண்டறிவதோடு, நிலவும் பிரச்சனைகளுக்கும் தீர்வும் காண முயற்சி செய்வேன் எனவும் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும், பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அ.சிவநேசன் கூறினார்.
“எனினும், நான் தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தரும்போது தனக்கென சிறப்பு நிகழ்ச்சிகளோ, வரவேற்புகளோ எதுவும் செய்ய வேண்டாம். திடீரென நானே வருவேன். உங்களைச் சந்தித்து நிலைமைகளைக் கண்டறிவேன். தீர்வுகளைக் காண முயற்சி செய்வேன். மற்றபடி தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்துவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, இதில் அரசியல் ஏதுமில்லை” என்றும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழுவுடன் இணைந்து சிவநேசன் ஏற்பாடு செய்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கத்தில் உரையாற்றும்போதே சிவநேசன் இவ்வாறு கூறினார். ஈப்போவிலுள்ள பேராக் டாரூல் ரிட்சுவான் கட்டடத்தின் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் இவ்வாண்டு உயர வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூல்களை ஆட்சிக் குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் இந்த நிகழ்ச்சியில் இலவசமாக வழங்கினார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பிரதிநிதிகள் ஆகியோரிடம் சிவநேசன் இந்த நூல்களை வழங்கினார்.
இந்தக் கருத்தரங்கத்திற்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவருமான இங்கா கோர் மிங் சிறப்பு வருகை தந்ததோடு, கருத்தரங்கிலும் உரையாற்றினார்.
மேலும் பேராக் மாநிலக் கல்வி இயக்குநரின் பிரதிநிதியாக கல்வி அமைச்சின் அதிகாரி ஹஜ்ஜா ரஹிமா முகமட் மற்றும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், பேராக் மாநில கல்விப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் அசிஸ் பாரி, பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கான குழுத் தலைவர் குணசேகரன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளர் சற்குணம் இந்தக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹரப்பான்) தேர்தல் கொள்கை அறிக்கையின் அடிப்படையில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாடுகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, 21ஆம் நூற்றாண்டின் நவீன கல்விச் சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளை முன்னேற்றி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.
2,000 ஏக்கர் நிலத்தின் நிலைமை என்ன?
இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய சிவநேசன் பேராக் மாநில இந்தியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்தும் சில விளக்கங்களை வழங்கினார்.
“இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பக்காத்தான் அரசின் முயற்சியால் வழங்கப்பட்டதா அல்லது தேசிய முன்னணி அரசின் முயற்சியால் வழங்கப்பட்டதா என்ற சர்ச்சையெல்லாம் இனியும் வேண்டாம். யார் கொடுத்தது என்பது முக்கியமல்ல. ஆனால், இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள் உண்மையிலேயே பேராக் மாநில இந்தியர்களுக்கான கல்வி நலன்களுக்காக சென்று சேர்கின்றதா என்பதுதான் முக்கியம். அதை நான் உறுதி செய்வேன்” என சிவநேசன் உறுதியளித்தார்.
தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து பாடத் தேர்ச்சிகளில் மட்டுமல்லாது புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட சிவநேசன், ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் ‘ஏ’ பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல மற்றபடி எத்தனை மாணவர்கள் மொத்தத்தில் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் அதனை அடைய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.