Home நாடு “இந்தியருக்கான அரசுப் பணிகளின் விழுக்காட்டை உயர்த்துவோம்” – நேர்காணலில் சிவநேசன் (பாகம் 2)

“இந்தியருக்கான அரசுப் பணிகளின் விழுக்காட்டை உயர்த்துவோம்” – நேர்காணலில் சிவநேசன் (பாகம் 2)

1000
0
SHARE
Ad

பீடோர்: (பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும், வழக்கறிஞரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனின் நேர்காணல் தொடர்கிறது…)

பீடோர் – 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் ஆட்சி அமைத்த அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணியின் சார்பில் இந்தியர்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினராக ஜசெக சார்பில் இடம் பெற்றார் சிவநேசன். “2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி எனது பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்றேன். அடுத்த நாள் பிப்ரவரி 6-ஆம் தேதி கண்விழித்தபோது பேராக் மாநிலத்தின் பக்காத்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருந்தது. படங்களில்தான் இதுபோன்று பார்த்திருக்கிறேன். ஆனால் எனது வாழ்க்கையிலும் இதுபோன்று நடந்ததை முதன் முறையாக அனுபவித்தேன்” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் சிவநேசன்.

பேராக் இந்திய சமூகத்திற்கு 2 ஆயிரம் ஏக்கர்

நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் சிவநேசன்

ஓராண்டுக்கும் குறைவான காலமே ஆட்சிக் காலத்தில் இருந்தாலும் நிறைவான பணிகளை இந்திய சமூகத்துக்கு வழங்கிய திருப்தி சிவநேசனுக்கு இருக்கிறது. அதில் ஒன்று பேராக் தமிழ்ப் பள்ளிகளுக்காக 2,000 ஆயிரம் ஏக்கர் நிலம் பெறுவதற்கான முயற்சியில் இறங்கி அதற்கான பரிந்துரையையும் சமர்ப்பித்தது அதன் அடிப்படையில்தான் அடுத்துவந்த தேசிய முன்னணி ஆட்சியில் மஇகாவால் அந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பெற முடிந்தது என்கிறார் சிவநேசன். இந்த விவகாரம் குறித்த அவரது விரிவான விளக்கம் ஏற்கனவே செல்லியலில் இடம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

(இணைப்பு: பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? – சிவநேசன் விளக்கம்)

“ஆட்சிக் குழு உறுப்பினராக அப்போதும் இப்போதும் இரண்டு முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்தி மாற்றங்களைக் கொண்டுவர நான் பாடுபட்டேன். தமிழ்ப் பள்ளிகள் மேம்பாடு, கல்வி விவகாரம் என்பது ஒன்று. அதற்காகத்தான் இந்த 2 ஆயிரம் ஏக்கர் பெற்றுத் தர முனைந்தது. அடுத்தது பேராக் மாநில அரசுப் பணிகளில் போதிய அளவில் இந்தியர்களின் விழுக்காட்டை உயர்த்துவது” என்று கூறும் சிவநேசன் அதற்கானப் பின்னணியையும் விளக்குகிறார்.

“பேராக் மாநில மக்கள் தொகையில் இந்தியர்கள் 13 விழுக்காடும், சீனர்கள் 33 விழுக்காடும், பூர்வ குடியினர் 3 விழுக்காடும், 49 விழுக்காடு மலாய்க்காரர்களும் இருக்கின்றனர். ஆக மலாய்க்காரர் அல்லாதார் பேராக் மாநிலத்தில் பெரும்பான்மையாக – அதாவது 51 விழுக்காடாக இருக்கின்றனர். பினாங்கு மாநிலத்தை அடுத்து மிக அதிக அளவிலான மலாய்க்காரர் அல்லாத மக்கள் தொகையைக் கொண்டது பேராக் மாநிலம்தான். ஆனால் அரசுப் பணிகளிலோ 3 விழுக்காடு மட்டுமே இந்தியர்கள். சுமார் 96 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். இந்த ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு சரிசெய்யலாம் என மனிதவளத் துறைக்கான பொறுப்பாளர் என்ற முறையில் ஆட்சிக் குழுவில் எனது பரிந்துரையை சமர்ப்பித்தேன். அதைச் செயல்படுத்துவதில் சில முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கட்டம் கட்டமாக அந்த நடவடிக்கையை நான் நகர்த்திக் கொண்டு வந்தபோதுதான் ஆட்சியை இழந்தோம். தற்போது மீண்டும் அந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறேன். அதைச் செயல்படுத்தும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறேன்” என்கிறார் சிவநேசன்.

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு குறித்துப் பேசும்போது மற்றொரு சுவாரசியமான தகவலைத் தருகிறார் சிவநேசன். “எல்லோரும் என்னை தமிழ்ப் பள்ளியில் படித்தாயா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்வேன், இந்தக் கேள்வியை நீங்கள் என்னைப் பார்த்துக் கேட்கக் கூடாது. எனது தந்தையார் அச்சலிங்கத்திடம் கேட்க வேண்டும். காரணம் தனது பத்து பிள்ளைகளில் 6 பேரை தமிழ்ப் பள்ளியில் சேர்த்தவர் 8-வது பிள்ளையான என்னை மட்டும் ஏனோ தமிழ்ப் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆனால், உங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் படிக்க வைத்தீர்களா என என்னைப் பார்த்துக் கேட்கலாம். அதை நான் செய்தேன். எனது 3 பிள்ளைகளும் செர்டாங் தமிழ்ப் பள்ளியில் படித்தார்கள்” என்று கூறும் சிவநேசன் மேலும் தொடர்கிறார்.

“தமிழ் சோறு போடுமா எனக் கேட்பார்கள். ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் படித்த எனது 3 பிள்ளைகளில் மூத்தவர் சட்ட விரிவுரையாளராகவும், இரண்டாமவர் ஏர் மலிண்டோ நிறுவனத்தில் அதிகாரியாகவும், மூன்றாவது பெண் வழக்கறிஞர் படிப்பையும், பயிற்சியையும் முடித்து விட்டு வழக்கறிஞராகப் பணியாற்றப் போகிறார்” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் சிவநேசன்.

ஆட்சிக் குழு உறுப்பினராக அடுத்த கட்ட நடவடிக்கைகள்

பேராக் மாநிலத்துக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை

ஆட்சிக் குழு உறுப்பினராக வேறு என்ன இலக்குகள் எனக் கேட்டபோது, “பொதுத் தேர்தலின்போது பேராக் மாநிலத்திற்கென நாங்கள் வழங்கிய பிரத்தியேக  தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு அரசு சேவையில் 10 விழுக்காடு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என நாங்கள் உறுதியளித்திருக்கிறோம். மற்றபடி சீனர்களுக்கோ, மலாய்க்காரர்களுக்கோ எந்தவித வேலைவாய்ப்பு விழுக்காடு ஒதுக்கீடும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. இந்த இலக்கை அடைய என்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன்” என்று கூறினார் சிவநேசன்.

“அதுமட்டுமல்ல. மாநில சுகாதாரப் பிரிவும் ஆட்சிக் குழு உறுப்பினராக எனது பார்வையின் கீழ் வருகிறது. எல்லா மருத்துவமனை உணவகங்களிலும் (கேண்டீன்)  இந்தியர், சீன உணவுகளுக்கென தனிக்கடைகள் ஏற்படுத்த வேண்டுமென நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்தக் கடைகள் பரிமாறும் உணவுகள் அனைத்தும் ஹலால் தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் உறுதி செய்யப்படும். இதுநாள் வரையில் இந்த நடைமுறை இருந்ததில்லை. மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகள், அந்த நோயாளிகளைப் பார்க்க வரும் அல்லது உடன்வரும் உறவினர்கள் இந்தியர்களாகவோ, சீனர்களாகவோ இருந்தால் அவர்களுக்கான உணவுகள் தற்போதுள்ள மருத்துவமனையில் கிடைப்பதில்லை. இதையும் சரிசெய்யவிருக்கிறோம்” என்கிறார் சிவநேசன்.

இதே அடிப்படையில், பேராக் மாநிலத்தின் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவக வரிசைகளிலும் குறைந்த பட்சம் ஒரு கடையாவது இந்தியர்களுக்கென ஒதுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்” என்று கூறி நேர்காணலை நிறைவு செய்தார் சிவநேசன்.

புதிய மத்திய அரசாங்கம் அதற்கேற்ற வகையில் அமைந்த புதிய மாநில அரசு, மக்கள் தேவைகளை நிறைவு செய்ய வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள்,  புதிய மாற்றங்களையும் உருமாற்றங்களையும் கொண்டுவரக் கொண்டிருக்கும் உறுதிப்பாடு, இவற்றுடன் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சிவநேசன் அவரது முயற்சிகளில் வெற்றியடைய, பேராக் மாநில இந்திய சமூகம் மேம்பாடு காண, நாமும் வாழ்த்தி விடைபெற்றோம்.

-இரா.முத்தரசன்

அ.சிவநேசனின் நேர்காணலின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் ‘செல்லியல் அலை’ இணைப்பில் காணலாம்:

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்: