கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து முன்னாள் கூட்டரசு நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான கோபால் ஸ்ரீராம் வழக்காடுவார் என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிவித்திருக்கிறார்.
அதே வேளையில் முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிரான குற்றவியல் வழக்குகளில் அரசாங்கத்தின் சார்பில் வழக்கை நடத்தப் போகும் வழக்கறிஞராக டத்தோ சுலைமான் அப்துல்லா (படம்) செயல்படுவார் என்றும் டோமி தோமஸ் அறிவித்திருக்கிறார்.
மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சட்டத் துறை விரிவுரையாளரான சுலைமான் அப்துல்லா நாட்டின் சிறந்த சட்ட அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறையில் படித்த மாணவர்களுக்கு சுலைமான் அப்துல்லா விரிவுரையாளராக வாய்த்திருந்தால் அவ்வளவு எளிதில் அவரை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தனது சட்ட அறிவுத் திறனை எடுத்துக்காட்டும் வண்ணம் அற்புதமாக விரிவுரைகளை வழங்கும் ஆற்றல் வாய்ந்தவர் அவர்.
நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு எதிர்வரும் (2019) பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீராம் (படம்), சுலைமான் அப்துல்லா இருவரும் இணைந்து உலகின் மிகப் பெரிய அரசாங்கச் சொத்தை சூறையாடும் சம்பவங்களைக் கொண்ட 1எம்டிபி விவகாரம் தொடர்பான வழக்குகளைக் கையாளவிருப்பது, நீதித் துறையின் மீதான நம்பகத் தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நஜிப் மீதான வழக்குகளைக் கையாள்வதில் தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதாலும் ஸ்ரீராம், சுலைமான் இருவருக்கும் இருக்கும் சட்ட அறிவு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவர்கள் இருவருக்கும் இந்தப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் டோமி தோமஸ் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறார்.
“மேலும் அந்த இருவரின் நேர்மையும், பின்னணியும் அப்பழுக்கில்லாத – கறையில்லாத – தொழில் நேர்த்தியைக் கொண்டது. அவர்கள் இருவருமே இந்த வழக்குகளை நடத்துவதற்கு கட்டணம் எதனையும் விதிக்காமல் இலவசமாகவே நடத்த முன்வந்திருக்கின்றனர்” என்றும் டோமி தோமஸ் கூறியிருக்கிறார்.
நஜிப் மீதான குற்றவியல் வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.