Home நாடு வேதமூர்த்தியின் புதிய கட்சி மஇகாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா?

வேதமூர்த்தியின் புதிய கட்சி மஇகாவுக்கு மாற்றாக உருவெடுக்குமா?

983
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – பலரும் எதிர்பார்த்தது போலவே, ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியின் தலைமையின் கீழ் இந்தியர்களுக்கான புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மலேசிய முன்னேற்றக் கட்சி (மமுக) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்தப் புதிய கட்சியின் பதிவு தற்போது சங்கப் பதிவிலாகாவில் பரிசீலனையில் இருந்து வருகிறது என வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

ஹிண்ட்ராப் இயக்கம் புதிய அரசியல் கட்சியாக உருமாற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், மலேசிய முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி அமைக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநிலத்திற்கு வருகை தந்து இந்திய சமூகத்தினருடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது “இந்திய சமுதாயத்தின் நலன்களை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க மலேசிய முன்னேற்றக் கட்சியின் தோற்றம் அவசியமாகிறது” என செனட்டருமான வேதமூர்த்தி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணியில் பல இன உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் இருந்தாலும், முழுக்க முழுக்க இந்தியர்களின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்கக் கூடிய – இந்தியர்களுக்காகப் போராடக் கூடிய – கட்சி ஒன்றை இந்திய சமுதாயத்தினர் விரும்புகின்றனர் என்றும் வேதமூர்த்தி மேலும் கூறினார்.

“இந்தியர்களுக்காக, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட இந்தியர்களுக்காக போராடும் இயக்கமாக ஹிண்ட்ராப் 2005 முதல் தீவிரமாக இயங்கி வந்திருக்கிறது. அதன் காரணமாக ஹிண்ட்ராப் அரசியல் ரீதியாகவும் தங்களைப் பிரதிநிதிக்க வேண்டும் என இந்திய சமூகத்தினர் விரும்புகின்றனர். எனவேதான் புதிய கட்சி ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது” என்றும் தெரிவித்த வேதமூர்த்தி,

“பெர்சாத்து கட்சி மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அமானா கட்சியும் இஸ்லாமியக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இஸ்லாமியப் போராட்டங்களுக்காக வேறு சில கட்சிகளும் செயல்படுகின்றன. எனவேதான், இந்தியர்களும் தங்களைப் பிரதிநிதிக்க கட்சி ஒன்று வேண்டுமென விரும்புகின்றனர்” என்றும் கூறியிருக்கிறார்.

மமுக பக்காத்தான் கூட்டணியில் இணையுமா எனக் கேட்கப்பட்டதற்கு, இது குறித்து இப்போது கருத்துரைக்க முடியாது, காரணம், இப்போதுதான் மமுக சங்கப் பதிவிலாகாவின் பதிவுக்காக பரிசீலனையில் இருக்கிறது என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், சங்கப் பதிவிலாகாவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பக்காத்தான் கூட்டணியில் இணைய தமது கட்சி விண்ணப்பிக்கும் என்றும் வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

வேதமூர்த்தியின் புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது மிகப்பெரிய இந்தியர் கட்சியாக செயல்பட்டு வரும் மஇகாவுக்கு மாற்றாக – மமுக உருவெடுக்குமா? என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த நான்காண்டுகளுக்கு அமைச்சராக இருக்கப் போகிறவர் – ஹிண்ட்ராப் போராட்டங்களின் மூலம் இந்திய சமூகத்தின் நம்பகத் தன்மையைப் பெற்றவர் – போன்ற காரணங்களால் – வேதமூர்த்தியின் தலைமையை ஏற்று இணைய இந்திய இளைஞர்கள் பலர் முன்வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.