Home நாடு வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்

வேதமூர்த்தி புதிய அரசியல் கட்சி தோற்றுவித்தார்

1798
0
SHARE
Ad
வேதமூர்த்தி – கோப்புப் படம்

கோலாலம்பூர் – மலேசிய முன்னேற்றக் கட்சி (Malaysian Advancement Party) என்ற பெயரிலான புதிய அரசியல் கட்சியை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தோற்றுவித்துள்ளார். இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராகச் செயல்படும் வேதமூர்த்தி, இந்திய சமுதாயத்தின் நலன்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், முன்னெடுத்துச் செல்லவும் இந்தக் கட்சி தோற்றுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்தக் கட்சிக்கான பதிவு மலேசிய சங்கப் பதிவிலாகாவுக்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேதமூர்த்தி மேலும் கூறியுள்ளார்.

இந்தக் கட்சியின் நோக்கம் இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார, சமய, சமூக நலன்களைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், முன்னெடுத்துச் செல்வதாகவும் இருக்கும் என்பதையும் வேதமூர்த்தி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியல் சாசனத்திற்கு ஏற்ப இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், ஒற்றுமையையும், நாட்டில் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கிலும் புதிய அரசியல் கட்சி பாடுபடும் என்பதோடு, இந்திய சமூகத்தினரை பலப்படுத்துவதற்கும், முன்னேற்றம் காணச் செய்வதற்கும் இந்தக் கட்சி பாடுபடும்.

நாட்டின் தேசிய மேம்பாட்டில் இணைந்து அனைவரும் முன்னேற்றம் காணும் வண்ணம் இனி அனைவருக்கும் நாட்டின் மேம்பாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் கூறினார்.

இந்திய சமுதாயம் முன்னேற்றம் காண்பதற்கும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் அரசாங்க உதவிகளைப் பெறும் பாதையிலிருந்து விலகி, நமது அடிப்படை உரிமைகளை பெற்று முன்னேறும் வகையில் புதிய கட்சியின் இலக்கும் நோக்கமும் அமைந்திருக்கும் என்றும் வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

அனைவருடனும் இணைந்து மேம்பாடு காண்பது, அனைவரும் சமம் என்ற கொள்கை, தரம், நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நமது முன்னோர்கள் வகுத்துப் போராடிய பாதையிலும் நோக்கத்திலும் மலேசிய முன்னேற்றக் கட்சி பாடுபடும் என்றும் வேதமூர்த்தி உறுதியளித்தார்.புதிய மலேசியாவின் இலக்குகளை நோக்கங்களை அடைய பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி பாடுபடும் என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.