கோலாலம்பூர் – பிரதமர் என்ற முறையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தீபாவளி வாழ்த்துச் செய்தியை துன் மகாதீர் முகமட் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கியிருக்கிறார். தற்போது ஜப்பானிய மன்னரின் சிறப்பு விருதைப் பெற ஜப்பான் நாட்டுக்கு 3 நாட்கள் வருகை தந்திருக்கும் மகாதீர், தனது வலைத் தளத்தில் தீபாவளி வாழ்த்துச் செய்தியைக் காணொளியாகப் பதிவிட்டிருக்கிறார்.
“மலேசியர்கள் கொண்டாடும் மற்ற பெருநாட்களைப் போலவே, தீபாவளியும் மற்ற இன, சமயப் பின்னணியைக் கொண்ட மக்களுடன் இணைந்து இந்துக்கள் கொண்டாடும் விழாவாகத் திகழ்கிறது. இந்த மகிழ்ச்சி அனைத்துப் பிரிவினராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது” என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட மகாதீர்,
“இந்துக்கள் கொண்டாடும் இந்தப் பெருநாள் மகிழ்ச்சியில் மற்ற மலேசியர்களும் உற்சாகத்துடன் கலந்து கொள்வதையும் காணமுடிகிறது. மக்களிடையே நிலவும் அமைதியையும், புரிந்துணர்வான சகோதரத்துவத்தையும் இந்தக் கொண்டாட்டம் பிரதிபலிக்கிறது” என்றும் கூறினார்.
“வேற்றுமையிலும் நம்மிடையே நாம் கொண்டிருக்கும் ஒற்றுமையையும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதையையும் நமது கொண்டாட்ட உணர்வுகளை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது. இந்த உணர்வுகளோடு அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த தடவை தீபாவளிக் கொண்டாட்டம் மேலும் பொருள் பொதிந்த எதிர்காலத்தை உருவாக்க அனைவரிடத்திலும் நம்பிக்கையை விதைக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன்” எனவும் மகாதீர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
“தீபங்களின் விழாவாகக் கொண்டாடப்படும் தீபாவளி, தீமைகளைத் தோற்கடித்து, ஒழித்து நன்மைகள் பிறக்கும் கொண்டாட்டமும் ஆகும். இந்த ஆண்டு மலேசிய இந்துக்களுக்கு இந்தத் தத்துவம் புதிய அர்த்தத்தை தரும் என்றும் நம்புகிறேன்” எனவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.