Home நாடு “மலேசியர்களிடையே சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தும் தீபாவளி” – வான் அசிசா வாழ்த்து

“மலேசியர்களிடையே சகோதரத்துவத்தை வலிமைப்படுத்தும் தீபாவளி” – வான் அசிசா வாழ்த்து

756
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியர்களிடையே நிலவி வரும் சகோதரத்துவ உணர்வையும், ஒற்றுமையையும் தீபாவளிக் கொண்டாட்டம் மேலும் வலுப்படுத்தி, ஒளிரச் செய்யும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“இனங்களுக்கிடையில் நிலவும் உயரிய சகோதரத்துவ உணர்வும், ஒத்துழைப்பும்தான் மலேசியாவின் வலுவான தூண்களாகும். இதன் காரணமாகத்தான் மலேசியா உலகுக்கே ஒரு முன்னுதாரண நாடாகத் திகழ்கிறது. இந்த அம்சங்களை நாம் எப்போதும் போற்றிப் பாதுகாத்து வரவேண்டும்” என துணைப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் விடுக்கும் முதல் தீபாவளிச் செய்தியில் வான் அசிசா குறிப்பிட்டார்.

எந்த ஓர் இனமும் புறக்கணிக்கப்படாது, ஒதுக்கப்படாது என்ற உறுதிமொழியை தனது செய்தியில் வலியுறுத்தியிருக்கும் வான் அசிசா, “நமக்கு வாய்த்திருக்கும் மகிழ்ச்சியை ஆதரவற்ற மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டும் அற்புதமான தருணம் தீபாவளி” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா, “இந்த இலக்குகளை நாம் அடைய, இந்திய சமுதாயத்திற்கு ஆதரவு வழங்க, 2019 வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 50 மில்லியன் ரிங்கிட் நாடு முழுமையிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்றும் சுட்டிக் காட்டினார்.

தேசிய மேம்பாட்டை நோக்கி நாம் நகரும் வேளையில் எந்த ஒரு பிரிவினரும் அந்த மேம்பாட்டிலிருந்து விடுபட்டு விடக் கூடாது என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. அனைவரும் கனவு காணும் புதிய மலேசியாவை உருவாக்க நாம் அனைவரும் முன்னோக்கி அடியெடுத்து வைப்போம் என்றும் வான் அசிசா தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.