புத்ரா ஜெயா – இன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளை புதன்கிழமை (07 நவம்பர்) அனைத்து இந்து ஊழியர்களும் பதிவு செய்யப்படாத விடுமுறையை (unrecorded leave) எடுத்துக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ பொர்ஹான் டோலா (படம்) சுற்றறிக்கை ஒன்றின் வழி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த வழக்கத்தின் மூலம் இந்துப் பெருமக்கள் இனி கூடுதல் நேரத்தைத் தங்களின் குடும்பத்தினருடன் செலவிட்டு தீபாவளியைக் கொண்டாடவுதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தீபாவளிக்கு மற்ற பெருநாட்களைப் போலவே இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இந்திய சமுதாயத்தின் சார்பில் விடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இந்த முறை தீபாவளிக்கு இரண்டு நாட்கள் விடுமறை வழங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல் கட்டமாக அரசாங்கத்தில் பணியாற்றும் இந்து ஊழியர்களுக்கு மட்டும் ஒரு நாள் கூடுதலாக பதிவு செய்யப்படாத விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.