திருவனந்தபுரம் – கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கேரளா பல்கலைக் கழகத்தில் எழுத்துருவியல் மற்றும் எழுத்துகளின் வடிவமைப்பு குறித்த சிறப்புரையாற்ற மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றுள்ள முத்து நெடுமாறன், கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் (mobile devices) தமிழ் உள்ளிட்ட இந்திய மற்றும் இந்தோசீன மொழிகளின் எழுத்துருவியல் மற்றும் வடிவமைப்பு குறித்த அம்சங்கள், உத்திகள் மீது நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றார்.
அந்த வகையில் 1937-இல் அமைக்கப்பட்ட கேரளா பல்கலைக் கழகத்தில் (படம்) அமைந்துள்ள நூல்நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழஞ்சுவடிகளையும் கையெழுத்துப் படிகளையும் ஆராய்வதற்காக முத்து நெடுமாறன் திருவனந்தபுரம் செல்லவிருந்தார்.
தமிழ் முதலிய பல இந்திய மொழிகளின் எழுத்துருவியல் துறையில், புதிய வடிவமைப்பு உத்திகளை ஆராய்ந்து வரும் முத்து நெடுமாறனின் பணிகளை அறிந்திருந்த கேரளா பல்கலைக் கழகத்தினர், அவரது வருகையை அறிந்து கொண்டு எழுத்துருவியல் மற்றும் வடிவமைப்புகள் குறித்து சிறப்புரை ஒன்றை ஆற்ற முத்து நெடுமாறனுக்கு அழைப்பு விடுத்தனர்.
இன்று இந்தியாவின் முதல் 30 முன்னணிப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாக கேரளா பல்கலைக் கழகம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்து நெடுமாறனின் உரை நிகழ்ச்சி, கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் பல்கலைக் கழக வளாகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை நவம்பர் 22-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறவிருக்கிறது.